கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை - மதுரை கோர்ட்டு தீர்ப்பு


கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை - மதுரை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 May 2019 4:00 AM IST (Updated: 11 May 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை அருகில் உள்ள குமணன்தொழுவை சேர்ந்த கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு வனப்பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு போலீசார் வாகன தணிக்கை செய்த போது, 2 கார்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த கார்களில் இருந்து 38 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மயிலாடும்பாறை அருகில் உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற கீரிப்பட்டி முருகன் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மயிலாடும்பாறை போலீசார், முருகனின் வீடு, தோட்டங்களில் சோதனை நடத்தினர். போலீசார் வருவதை அறிந்த முருகன் தப்பி ஓடிவிட்டார். அவருடைய தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்து 220 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வந்தனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து, தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்காக அனுப்பி வந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பு கூறினார். கஞ்சா பதுக்கி வைத்து இருந்த முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதையடுத்து முருகனை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Next Story