நீட் தேர்வினால் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கவிடாமல் தடுக்கின்றனர் - தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் தாக்கு
நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கவிடாமல் தடுக்கின்றனர் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் கூறினார்.
சூலூர்,
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2-வது நாளாக நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இருகூரில் நேற்று இரவு நடந்த பிரசார கூட்டத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு பேசியதாவது:-
நாங்கள் தேர்தல்களில் எத்தனை முறை நின்றாலும் தனித்தே போட்டியிடுவோம். அது தோற்றாலும் சரி. ஜெயித்தாலும் சரி. யார் காலிலும் விழுந்து கூட்டணி அமைக்க மாட்டோம். நாங்கள் கட்டும் வேட்டியில் கூட கறை இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். தற்போது ஆளும் கட்சிக்காரர்கள் ஆட்சியின் அதிகாரத்தையும் வலிமையையும் உணராதவர்கள். மற்றவருக்கு பயந்து கொண்டு அடிமை ஆட்சி நடத்துபவர்கள். மத்தியிலே ஆளுகின்ற ஆட்சியாளர்கள் சொல்வதைக்கேட்டுக்கொண்டு தேவையில்லாத பல திட்டங்களை மக்கள் மீது திணிக்கிறார்கள்.
நீட் தேர்வு என்ற திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் தடுக்கின்றனர். அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மருத்துவராக முடியாது. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவராகலாம். இது போன்ற ஒரு கேவலமான நிலைக்கு கல்வியின் தரத்தை கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு நீட் தேர்வில் மருத்துவம் படித்து வெற்றி பெற்று மருத்துவம் படிப்பவர்கள் எந்த நாட்டில் அதிக சம்பளம் கொடுக்கிறார்களோ அந்த நாட்டுக்கு சென்று விடுகிறார்கள். அதனால் நம் நாட்டில் மருத்துவத்துறையின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்காமல் போய்விடுகிறது.
தாய் மொழியான தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள். இதை நாங்கள் சொன்னால் இனவெறியர்கள் என்று கூறுகிறார்கள். போக்குவரத்து துறையில் நஷ்டம் என்கிறார்கள் அது குறித்து கேட்டால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். இலவச பஸ் பாஸ் கொடுப்பதற்கு பதிலாக இலவச கல்வியை கொடுத்தால் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள். போக்குவரத்து துறையும் நஷ்டம் இல்லாமல் இருக்கும். மத்திய அரசு மாநில அரசின் மீது அதிக வரிகளை போட்டு மொத்தமாக எடுத்து சென்று விடுகிறது. ஆனால் மாநிலத்தில் கஜா புயல் போன்ற இயற்கை அசம்பாவிதங்கள் நடக்கும்போது அதற்கான நஷ்டஈடு கேட்டால் அதை தராமல் நாம் கையேந்திக் கொண்டு நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. மத்திய அரசுக்கு இணையாக ஒவ்வொரு மாநில அரசு உருவாக்க வேண்டும். நமக்கென்று தனித்தனி சட்டங்கள் பிறப்பித்துக் கொள்ள வேண்டும்.
கல்வித்துறையில் வ.உ.சி., தீரன் சின்னமலை போன்றவர்கள் குறித்து நாம் படிக்க வேண்டும். வடநாட்டு அக்கால மன்னர்கள் தலைவர் குறித்து படித்து நமக்கு என்ன பயன். படிக்காத காமராஜர் கூட எப்போதும் மத்திய அரசுக்கு அடிபணியாமல் மன உறுதியோடு இருந்தார். ஆனால் தற்போது ஆளும் மாநில அரசானது மத்திய அரசுக்கு அடிபணிந்து உள்ளது. எல்லா பருவமும் சமநிலையாக உள்ள நாட்டில், எல்லா வளமும் பெற்ற நாட்டில் ஏன் இன்னமும் நம் மீது கடன் சுமை சுமத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 60 வயதில் ஓய்வூதியம் தருவோம். விவசாயத்தை அழியாமல் காப்போம்.கோவையில் உள்ள சுவையான சிறுவாணி குடிநீரை வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்கு விற்று ஆட்சியாளர்கள் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கிறார்கள். வளர்ச்சி, வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள். சாக்கடையில் கழிவுகளை அள்ளுவதற்கு கூட மனிதர்கள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். அதை அகற்றும் எந்திரத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் வளர்ச்சியா?.
இவ்வாறு சீமான் பேசினார்.
பிரசார கூட்டத்தில் சூலூர் தேர்தல் தொகுதி பொறுப்பாளர் சக்திவேல் முருகன் இருகூர் பொறுப்பாளர் இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்திலும் சீமான் பேசினார்.
Related Tags :
Next Story