முகநூல் மூலம் அறிமுகமாகி, வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.4¼ லட்சம் மோசடி - கோவை வந்த வடமாநில வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்
முகநூல் மூலம் அறிமுகமாகி வேலைவாங்கித்தருவதாக கூறி ரூ.4¼ லட்சத்தை மோசடி செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
ஈரோட்டில் உள்ள வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 26). இவர் கோவையில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பலர் வேலை கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த விவேக்குமார் பாண்டே என்கிற மனீஷ்குமார் (29) அறிமுகம் ஆனார்.
அவர் ஆர்த்தியிடம் தானும் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், பலருக்கு வேலை வாங்கி கொடுத்து உள்ளதாகவும் கூறி உள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆர்த்தி, தான் நடத்தி வரும் நிறுவனத்தில் 7 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து உள்ளனர். எனவே அவர்களுக்கு வேலை வாங்கிக்கொடுங்கள் என்று கூறினார்.
அதற்கு மனீஷ்குமார், 7 பேருக்கும் எனக்கு தெரிந்த நிறுவனத்தில் வேலை தயாராக இருக்கிறது, அதற்கு ரூ.4¼ லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே ஆர்த்தியும், தனது நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருந்த 7 பேரிடம் தெரிவித்தார். அவர்கள் மனீஷ்குமாரிடம் பேசியதுடன், அவர் கூறியபடி ரூ.4¼ லட்சத்தை ஆன்லைன் மூலம் மனீஷ்குமார் வங்கி கணக்கில் செலுத்தினார்கள்.
ஒரு மாதத்தில் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்த மனீஷ்குமார், அவர்களுக்கு வேலைவாங்கி கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 7 பேரும் மனீஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி மற்றும் பணம் கொடுத்த 7 பேரும் அவரின் முகநூல் மூலம் தொடர்பு கொண்டனர். அதற்கு அவர் விரைவில் வேலை வாங்கி கொடுத்துவிடுவதாக கூறியும், வேலைவாங்கி கொடுக்கவில்லை. அதன் பின்னர்தான் மனீஷ்குமார் தங்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆர்த்தி மற்றும் பணம் கொடுத்து ஏமாந்த 7 பேரும் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், அந்த நபரை கோவை வரவழைக்க சில ஆலோசனைகளை வழங்கினார்கள். அதன்படி அவரிடம் பேசிய ஆர்த்தி, மேலும் பலர் வேலைக்காக என்னிடம் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் ரூ.10 லட்சம் வரை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாங்கி கொடுங்கள் என்று கூறி உள்ளார்.
உடனே மனீஷ்குமார், பணத்தை எனக்கு ஆன்லைன் மூலம் அனுப்புங்கள் என்றதற்கு, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துவிடும். எனவே நீங்கள் நேரில் கோவை வாருங்கள், நான் பணத்தை கொடுக்கிறேன் என்று கூறினார்.
அதை நம்பிய மனீஷ்குமார் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story