விளையாட்டு விடுதிகளில் சேர மாநில அளவிலான தேர்வு; ஈரோட்டில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது


விளையாட்டு விடுதிகளில் சேர மாநில அளவிலான தேர்வு; ஈரோட்டில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 5:43 PM GMT)

விளையாட்டு விடுதிகளில் சேர மாநில அளவிலான தேர்வில் ஈரோட்டில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது.

ஈரோடு,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ், பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்கும் இடவசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிக்கூடங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய பகுதிகளில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகளும் உள்ளன.

மேற்கண்ட விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற, 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நடந்தது. இதில் தேர்வு பெற்ற மாணவ -மாணவிகளுக்கு மாநில அளவிலான தேர்வு நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மாணவர்களுக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா அரங்கில் நடத்தப்படுகிறது. அதன்படி 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 15-ந் தேதியும், 8 வகுப்பு மாணவர்களுக்கு 16-ந்தேதியும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 17-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 18-ந்தேதியும் மாநில அளவிலான தேர்வு நடக்கிறது. இதேபோல் மாணவிகளுக்கான தடகள போட்டி சென்னை ஜவகர்லால் நேரு அரங்கில் நடத்தப்படுகிறது. அங்கு வருகிற 15-ந் தேதி 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கும், 16-ந் தேதி 9-ம் வகுப்பு மாணவிகளுக்கும், 17-ந் தேதி பிளஸ்-1 மாணவிகளுக்கும் தடகள போட்டிகள் நடக்கிறது.

கூடைப்பந்து போட்டி 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 15-ந் தேதியும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 16-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 17-ந் தேதியும் தஞ்சாவூர் அன்னை சத்யா அரங்கில் நடத்தப்படுகிறது. இதேபோல் கூடைப்பந்து போட்டி 7, 8, 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு 15-ந் தேதியும், பிளஸ்-1 மாணவிகளுக்கு 16-ந் தேதியும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

7, 8, 9 மற்றும் பிளஸ்-1 மாணவ -மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி சென்னை ஜெ.என். அரங்கிலும், இறகுபந்து போட்டி கூடலூர் அண்ணா அரங்கிலும், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை அக்குவாட்டிக் அரங்கிலும், வில்வித்தை போட்டி நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், பளு தூக்குதல் போட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், மேஜைபந்து போட்டி மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். அரங்கிலும், டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் அரங்கிலும், டேக்வாண்டா போட்டி பெரம்பலூர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரங்கிலும் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

ஸ்குவாஷ் போட்டி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கிலும், நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்திலும் வருகிற 16-ந் தேதி நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சென்னை அசோக்நகர் புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடக்கிறது. அதன்படி 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 15-ந் தேதியும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 16-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 17-ந்தேதியும் தேர்வு நடக்கிறது.

மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நெய்வேலி என்.எல்.சி. விளையாட்டு பள்ளிக்கூடத்தில் நடக்கிறது. அங்கு 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 15-ந் தேதியும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 16-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 17, 18-ந் தேதிகளிலும் போட்டிகள் நடக்கிறது. மாணவிகளுக்கான கால்பந்து போட்டி ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதன்படி 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு வருகிற 15-ந்தேதியும், 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு 16-ந் தேதியும், பிளஸ்-1 மாணவிகளுக்கு 17-ந் தேதியும் மாநில அளவிலான தேர்வு நடக்கிறது.

திருச்சி அண்ணா அரங்கில் 7, 8-ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு வருகிற 15-ந் தேதியும், 9 மற்றும் பிளஸ்-1 மாணவ -மாணவிகளுக்கு 16-ந்தேதியும் ஜூடோ போட்டி நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 7, 8-ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு வருகிற 15-ந் தேதியும், 9-ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு 16-ந் தேதியும், பிளஸ்-1 மாணவ -மாணவிகளுக்கு 17-ந் தேதியும் கபடி போட்டிகள் நடக்கிறது.

மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். அரங்கில் 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதியும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 16-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 17, 18-ந்தேதிகளிலும் கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. சென்னை உள் விளையாட்டு அரங்கில் 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு வருகிற 15-ந் தேதியும், 9, பிளஸ்-1 மாணவிகளுக்கு 16-ந்தேதியும் கைப்பந்து போட்டி நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு வருகிற 15-ந் தேதியும், 9, பிளஸ்-1 மாணவிகளுக்கு 16-ந் தேதியும் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 15-ந் தேதியும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 16-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 17-ந் தேதியும் ஆக்கி போட்டிகள் நடக்கிறது.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு வருகிற 15-ந் தேதியும், பிளஸ்-1 மாணவ -மாணவிகளுக்கு 16-ந் தேதியும் வாள்சண்டை போட்டி நடத்தப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு வருகிற 15-ந் தேதியும், பிளஸ்-1 மாணவ -மாணவிகளுக்கு 16-ந் தேதியும் ஹேண்ட்பால் போட்டி நடக்கிறது.

Next Story