நாகர்கோவிலில் விஷவாயு தாக்கி 70 அடி ஆழ கிணற்றுக்குள் மயங்கிய தொழிலாளி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


நாகர்கோவிலில் விஷவாயு தாக்கி 70 அடி ஆழ கிணற்றுக்குள் மயங்கிய தொழிலாளி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 11 May 2019 9:45 PM GMT (Updated: 11 May 2019 6:15 PM GMT)

நாகர்கோவிலில் விஷவாயு தாக்கி 70 அடி அழ கிணற்றுக்குள் மயங்கிய தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்தசம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பெருவிளையை சேர்ந்தவர் தங்கம். இவருக்கு சொந்தமான கிணறு ஒன்று அதே பகுதியில் உள்ளது. இந்த கிணற்றில் உள்ள மோட்டாரில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இதை சரிசெய்ய அதே பகுதியில் வசித்து வரும் தொழிலாளி குமாரராஜ் (வயது 33) என்பவரை அழைத்தனர். குழாய்களில் அடைப்பை சரிசெய்வது, புதிய குழாய் பொருத்துவது உள்ளிட்ட வேலைகளை இவர் பார்த்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் மோட்டாரில் உள்ள அடைப்பை சரிசெய்ய குமாரராஜ் கிணற்றுக்குள் இறங்க முற்பட்டார். இந்த கிணற்றுக்குள் எளிதில் இறங்கிவிட முடியாது. ஏன் எனில் அங்கு படிக்கட்டுகள் கிடையாது. குழாய்களை பிடித்து ஆபத்தான நிலையில் தான் கிணற்றுக்குள் இறங்க வேண்டும். அதன்படி குமாரராஜ் குழாய்களை பிடித்துக் கொண்டு கிணற்றுக்குள் மெல்ல மெல்ல இறங்கினார்.

சுமார் 70 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 10 அடி வரை குமாரராஜ் இறங்கியிருந்தார். அப்போது அவருக்கு லேசான நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் எப்படியோ 40 அடி வரை இறங்கி மோட்டார் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டார். மோட்டார் வைக்கப்பட்டு இருக்கும் கம்பியில் உட்கார்ந்தார். அப்போது அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுவிட்டது. இதனால் கம்பியிலேயே தொங்கினார். கிணற்றின் மேலே நின்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் குமாரராஜை பெயரை சொல்லி அழைத்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. கிணற்றுக்குள் குமாரராஜீக்கு என்ன ஆனது? என்று தெரியவில்லை. எனவே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றை பார்வையிட்டபோது அதில் விஷவாயு இருந்தது தெரியவந்தது. விஷவாயு தாக்கியதால் தான் குமாரராஜ் மயக்கம் அடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தண்ணீரை வேகமாக பீய்ச்சு அடிக்கும் போது விஷவாயு வெளியேற்றப்பட்டுவிடும் என்று தீயணைப்பு வீரர்கள் கூறினார்கள். விஷவாயு முழுமையாக வெளியேற்றப்பட்ட பிறகு தீயணைப்பு வீரர் ஒருவர் தன் உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கி குமாரராஜை மீட்டார்.

பின்னர் அவரை வலையில் வைத்து மேலே கொண்டு வந்தார்கள். இதைத் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த குமாரராஜ் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி தீயணைப்பு வீரர்களிடம் கேட்டபோது, “குமாரராஜ் இறங்கிய கிணற்றில் 10 அடி முதல் 30 அடி வரை மட்டுமே விஷவாயு காணப்பட்டு உள்ளது. அதற்கு கீழ் விஷவாயு இல்லை. குமாரராஜ் 30 அடி ஆழத்தை தாண்டி சென்றுவிட்டதால் வெறும் மயக்கத்துடன் உயிர்பிழைத்துக் கொண்டார். அதுவே விஷவாயு நிறைந்திருந்த பகுதியில் சிக்கியிருந்தால் கண்டிப்பாக அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்” என்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story