மூலனூர் அருகே வீடுகளில் தொடரும் திடீர் தீ விபத்து பொதுமக்கள் போலீசில் புகார்
மூலனூர் அருகே வீடுகளில் தொடரும் திடீர் தீ விபத்து குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர்.
மூலனூர்,
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உற்பட்ட எம்.காளிபாளையம் ஊராட்சி காளிபாளையம், வாளநாயக்கன்வலசு ஆகிய பகுதிகளில் சுமார் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை இரவு மற்றும் பகல் நேரங்களில் வீடுகளின் மேல் கல் விழுந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வீடுகளில் ஆங்காங்கே திடீர் தீ பற்றி எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–
வளர்மதி என்பவரது வீட்டில் திடீர் தீ பற்றி எரிந்தது. இதில் இலவச கோழிகள் வளர்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட கோழிகள் தீக்கிரையானது. அன்னபூரணி என்ற பெண்ணின் வீட்டில் பற்றி எரிந்த தீயில் மெத்தை மற்றும் துணிகள் எரிந்து நாசம் அடைந்தன. இது போன்று சுமார் 8–க்கும் மேற்பட்ட வீடுகளில் அடிக்கடி தீப்பிடித்தது. உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அணைத்தோம்.
தீ விபத்து எப்படி ஏற்படுகிறது என தெரியவில்லை. கத்திரி வெயில் காரணமாக தீ பிடிப்பதற்கும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் வீட்டுக்குள் கட்டில் மெத்தை, அலமாரி உள்ளிட்டவைகளில் தீ பற்றி எரிகிறது. உடனே தண்ணீர் ஊற்றி அணைத்து உள்ளோம்.
எங்கள் கிராமத்தில் வீடுகளில் தொடர்ந்து அடிக்கடி தீ விபத்து நடப்பது குறித்து மூலனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம். இந்த தீ விபத்து ஏதேனும் சதியா? அல்லது தெய்வ குற்றமா? என தெரியவில்லை. திடீர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தீ விபத்து ஏற்படுவதால் நாங்கள் பீதி அடைந்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.