மங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


மங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 6:32 PM GMT)

மங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்கலம்,

திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள பூமலூர் ஊராட்சிக்குட்பட்டது நடுவேலம்பாளையம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்களாகவும், பனியன் நிறுவன தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

பூமலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடுவேலம்பாளையம் பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணிக்கு நடுவேலம்பாளையம் பஸ் நிறுத்தம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், கடந்த 15 நாட்களாகியும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. குடிப்பதற்கு காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என்றனர். இதை தொடர்ந்து பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிநீர் வினியோகிக்கும் போது ஒரு சிலர் மின்மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் பெரும்பாலானவர்களுக்கு வினியோகிக்க முடியவில்லை. எனவே சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story