பா.ஜனதா நிர்வாகியை போலீசார் தாக்கியதாக கூறி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் நள்ளிரவில் பரபரப்பு
திருப்பூரில் பா.ஜனதா நிர்வாகியை போலீசார் தாக்கியதாக கூறி, திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தை நள்ளிரவில் இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் டூம்லைட் மைதானம் டிமாண்ட் வீதியை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 36). பா.ஜனதா நிர்வாகி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய ரோந்து போலீஸ்காரர் வினோத் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அசோக்குமாருக்கும், போலீஸ்காரர் வினோத்துக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் ரோந்து வாகனம் வரவழைக்கப்பட்டு அசோக்குமாரை அதில் ஏற்றி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அசோக்குமாரை போலீசார் தாக்கியதாக கூறி நள்ளிரவு 1 மணி அளவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் செயலாளர் கிஷோர்குமார் உள்பட திரளான நிர்வாகிகள் தெற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா அங்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் பொது இடத்தில் தகராறு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அசோக்குமார் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர். 2.30 மணிக்கு பிறகே இந்து முன்னணியினர் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு இருந்து கலைந்து சென்றனர். நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.