ராமேசுவரம் கோவில் ரத வீதியில் மந்த கதியில் வாருகால் அமைக்கும் பணி பக்தர்கள் பள்ளத்தில் விழும் அபாயம்


ராமேசுவரம் கோவில் ரத வீதியில் மந்த கதியில் வாருகால் அமைக்கும் பணி பக்தர்கள் பள்ளத்தில் விழும் அபாயம்
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 6:55 PM GMT)

ராமேசுவரம் கோவில் ரத வீதியில் மந்த கதியில் நடந்து வரும் வாருகால் அமைக்கும் பணியால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அங்கிருந்து சன்னதிதெரு,மண்டிதெரு, வடக்குரதவீதி சாலை வழியாக நடந்து வந்து வடக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி விட்டு அதன் பின்னர் தெற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரம் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடி செல்லும் கழிவு நீர், மழை காலங்களில் பிரகாரங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் வெளியே செல்ல வசதியாக கோவிலின் வடக்கு ரத வீதி சாலையில் இருந்து கிழக்கு ரத வீதி சாலை மற்றும் தெற்கு ரதவீதி சாலை வரையிலும் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.3½ கோடியில் வாருகால் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த பணிக்காக வடக்கு ரத வீதி சாலை, கிழக்குரதவீதி மற்றும் தெற்குரதவீதி வரை சுமார் 4 அடி உயரத்திற்கு குழி தோண்டப்பட்டு கான்கிரீட் தளம் போடப்பட்டு வாருகால்அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

வாருகால் அமைக்கும் பணியோ துரிதமாக நடைபெறாமல் மந்த கதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாருகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் ஏராளமான கம்பிகள் வெளியே தெரிவதுடன்,பள்ளத்தின் அருகில் பக்தர்கள் உள்ளிட்ட யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் ஒரு தடுப்பு கம்பியோ,கயிறுகள் கூட கட்டப்படாமல் பணிகள் நடந்து வருவதால் பக்தர்கள் மற்றும் வயதானவர்கள் பள்ளத்திலும்,கம்பியின் மீதும் விழும் அபாயம் இருந்து வருகிறது. எனவே வாருகால் அமைக்கும் பணியை வேகமாக முடிக்கவும்,பக்தர்களின் நலன் கருதி வாருகால் அமைக்க தோண்டப்பட்டுள்ள ரத வீதிகளில் உள்ள பள்ளத்தை சுற்றிலும் ஏராளமான தடுப்பு கம்பிகள் அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளும் மற்றும் திருக்கோவில் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story