சாத்தூரில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர்கள் மீது மேலும் ஒரு வழக்கு


சாத்தூரில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர்கள் மீது மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 11 May 2019 11:00 PM GMT (Updated: 11 May 2019 7:08 PM GMT)

சாத்தூரில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர்கள் மீது பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி நகை திருடியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சாத்தூர்,

சாத்தூரில் இருசக்கர பெட்டியில் வைத்திருந்த 41 பவுன் நகை திருட்டு போனதாக சிவகாசியை சேர்ந்த ராதிகா(வயது40) கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் காவல் நிலைய போலீசார் இருக்கன்குடியை சேர்ந்த ராஜ்குமார்(33) மற்றும் அமீர்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார்(20) இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 61 பவுன் தங்க நகை ரூ. 3 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் சிவகாசியை சேர்ந்த செண்பக பவானி(25) என்பவரது இருசக்கர வாகனத்தில் இருந்து 20 பவுன் தங்க நகை ரூ. 3 லட்சத்தை திருடியதாக ஒப்பு கொண்டனர்.

இவர்கள் மீது 13 பவுன் நகை திருடியதாக பெண் ஒருவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் கோவில்விளை சேர்ந்த அனிஷ் மனைவி ஜாஸ்மீன்ஆஷா (30). குழந்தையில்லை என்ற கவலையில் சாத்தூரில் உள்ள ஒரு ஆலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த ராஜ்குமார் மற்றும் கூட்டாளியுடன் சேர்ந்து அந்த பெண்ணிடம் சின்னப்பர் குருசடி ஆலயத்தில் நகைகளை வைத்து பரிகாரபூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பி சின்னப்பர் குருசடி ஆலயத்திற்கு சென்று அந்த பெண் அணிந்திருந்த 13 பவுன் நகைகளை வைத்து பிரார்த்தனை செய்தபோது 2 பேரும் நகைகளை திருடி சென்றதாகவும்,ஜாஸ்மீன்ஆஷா யாரிடமும் சொல்லாமல் ஊருக்கு சென்று விட்டதாகவும். தற்போது 2 பேரும் கைதான தகவலைஅறிந்து தனது நகைகளையும் மீட்டுதரும்படி சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கைதான 2 வாலிபர்கள் மீதும் போலீசார் மேலும் ஒரு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story