தேர்தல் பறக்கும்படையினர் சோதனை ரியல் எஸ்டேட் ஊழியரிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்
விருதுநகரில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையின் போது காரில் வந்த ரியல் எஸ்டேட் ஊழியரிடம் ரூ.44 லட்சத்தை பறிமுதல் செய்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு முடிந்து விட்டாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும்படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான பறக்கும்படையினர் விருதுநகர்– அருப்புக்கோட்டை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அருப்புக்கோட்டையில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் இருந்தார். அவரிடம் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.44 லட்சம் இருந்தது. அவர் தான் பணியாற்றும் ரியல் எஸ்ட் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனத்துக்காக பணம் வசூல் செய்து கொண்டு அதனை மதுரைக்கு எடுத்து செல்லவதாக தெரிவித்தார். ஆனாலும் ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது விசாரணைக்கு பின்னர் தேவையான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.