விருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


விருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 May 2019 11:15 PM GMT (Updated: 11 May 2019 7:32 PM GMT)

விருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகவதி. விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 8-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த திலகவதியை பேரளையூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(19) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. அங்கு நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மாணவியின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட திலகவதியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கருவேப்பிலங்குறிச்சியில் நேற்றுமுன்தினம் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கொலையுண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் பா.ம.க. துணைப்பொதுச்செயலாளர்கள் பழ.தாமரை கண்ணன், அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், சுரேஷ், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோரிடம் மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

இதன்பிறகு மாணவியின் பெற்றோர் கண்ணீருடன் கூறுகையில், எங்கள் மகளை கொன்ற கொலையாளி ஆகாசுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற னர். பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன் கூறுகையில், கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தினோம். உரிய நிவாரணம் தரவும், அரசு வேலை வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார். அதனை ஏற்று மாணவியின் உடலை வாங்குவதற்கு சம்மதித்துள்ளோம் என்றார்.

இதை தொடர்ந்து திலகவதியின் உடலை பெற்றுக்கொள்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து கருவேப்பிலங்குறிச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து இறுதிசடங்கு நடைபெற்று, அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story