தேர்தல் பறக்கும் படையினர் என கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.20 லட்சம் பறிப்பு 4 பேருக்கு வலைவீச்சு


தேர்தல் பறக்கும் படையினர் என கூறி நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.20 லட்சம் பறிப்பு 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 May 2019 3:45 AM IST (Updated: 12 May 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நிதி நிறுவன ஊழியர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் என கூறி ரூ.20 லட்சத்தை பறித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மதுரை,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(வயது 24), ஆனந்தன் ஆகியோர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் மதுரையில் உள்ள நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ரூ.20 லட்சத்தை செலுத்துவதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் மதுரை வரிச்சியூர் பகுதியில் வந்த போது, தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர், தேர்தல் பறக்கும் படையினர் என்று கூறி பஸ்சுக்குள் ஏறினார்கள். அப்போது அவர்கள் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பஸ்சில் இருந்தால் எழுந்து வந்து விடவும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதை கேட்டதும் சரவணனும், ஆனந்தனும் பையுடன் எழுந்து வந்தனர்.

அவர்களை பஸ்சில் இருந்து இறங்க சொல்லிய அவர்கள், 2 பேரையும் காரில் ஏற்றி கொண்டு கிளம்பி சென்றனர். பின்னர் காரில் செல்லும் போது நிதிநிறுவன ஊழியர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்து, அதில் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பணத்திற்குரிய ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் காண்பித்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு, நிதி நிறுவன ஊழியர்களிடம் கூறினர். இதனைத்தொடர்ந்து பறக்கும் படையினர் என்று கூறிய நபர்கள் பாதி வழியில் செல்லும்போது சரவணனையும், ஆனந்தனையும் காரில் இருந்து இறக்கிவிட்டனர்.

ஆனால் பறக்கும் படையினர் என கூறிய நபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஊழியர்கள் 2 பேரும் நடந்த சம்பவம் குறித்து கருப்பாயூரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், பறக்கும் படையினர் என கூறி ரூ.20 லட்சத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறியிருந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார் 2 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து, தேர்தல் பறக்கும் படையினர் வந்த கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுதவிர ஊழியர்கள் வந்த பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டரிடம் நடந்த சம்பவம் உண்மையா? என்பது குறித்தும் விசாரித்தனர். அவர்கள் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் இந்த சம்பவம் உண்மை தானா? அல்லது பணத்தை அபகரிக்க ஊழியர்களே நடத்திய திட்டமிட்ட கொள்ளை நாடகமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பறக்கும் படையினர் என கூறி ரூ.20 லட்சத்தை பறித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story