கடலூர், பாடலீசுவரர் கோவில் சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு
கடலூர் பாடலீசுவரர் கோவில் சன்னதி தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதற்கு நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் 1,500 ஆண்டுகள் பழமையான பாடலீசுவரர் கோவில் உள்ளது. வைகாசி மாதத்தில் இக்கோவிலில் 10 நாட்கள் வைகாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வீதிஉலா நடைபெறும், இதுதவிர கோவில் தெப்பக்குளத்தையொட்டியுள்ள மண்டபத்தின் முன்பு பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் தெருவடைச்சான் சப்பர உலா மற்றும் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. எனவே கோவில் முன்பு சன்னதி தெருவில் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கோவில் செயல் அதிகாரி நகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பினார்.
அதன் பேரில் நகராட்சி ஆணையர் அரவிந்த்ஜோதி(பொறுப்பு) உத்தரவின் பேரில் நகரமைப்பு அதிகாரி அங்குசுப்பிரமணியன், சுகாதார அதிகாரிகள் பாக்கியநாதன், ஜெயகுமார், சிவா மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் சன்னதி தெருவில் சாலையோரம் உள்ள கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளையும், நடைபாதையோர தேங்காய், பழக்கடைகளையும் அகற்றினார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபாதையோர தேங்காய், பழக்கடை வியாபாரிகள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். இந்த கடைகளை நடத்துபவர்கள் கோவிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது.
இப்போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில் பல்லக்குகளில் வீதி உலாவுக்காக சென்றிருந்த பாடலீசுவரர் சாமியும், பஞ்சமூர்த்தி சாமிகளும் கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். சன்னதி தெருவில் போராட்டம் நடந்து கொண்டு இருந்ததால் பல்லக்குகளில் இருந்த சாமிகளால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் பல்லக்குகள், சன்னதி தெருவிலேயே நிறுத்தப்பட்டன, இதன்பிறகு இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் தலையிட்டு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தியபின் பல்லக்குகள் கோவிலுக்கு புறப்பட்டு சென்றன.
இந்த கோவிலை பொறுத்தவரையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியையும் கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லையென்று பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதனால் வெளியூர் பக்தர்களின் வருகை குறைந்து விட்டதாக உள்ளூர் பக்தர்கள் ஆதங்கத்துடன் கூறினார்கள். ஏனெனில் லாரன்ஸ்ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட பின் வாகனங்கள் பாடலீசுவரர் கோவிலுக்கு வந்து செல்வதில் சிரமங்கள் உள்ளதால் வெளியூர் வாகனங்கள் அவ்வளவாக வருவதில்லையாம்.
அதுதவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி கூட இல்லையாம். கோவிலுக்கு வெளியே நகராட்சி நிர்வாகம் கட்டிக்கொடுத்த கட்டண கழிப்பறை மற்றும் குளியலறையும் 3 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. எனவே பாடலீசுவரர்கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் வந்து செல்லும் வகையில் மெயின்ரோடுகளில் கைகாட்டிகள் வைக்கவும், கோவிலுக்கு வெளியே உள்ள கட்டண கழிப்பறையை திறந்து விடவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story