பெண்ணாடம் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - வாலிபர் கைது


பெண்ணாடம் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 7:32 PM GMT)

பெண்ணாடம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம், 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே இறையூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. நேற்று காலை 11 மணி அளவில் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் வந்தார். பின்னர் அவர் அந்த பையில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தார்.

இந்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். இதை பார்த்த அந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு, தான் வந்த மொபட்டில் அங்கிருந்து தப்பினார். உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை துரத்தினர். இருப்பினும் அந்த வாலிபர் தப்பி சென்று விட்டார்.

பின்னர் இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டனர். அப்போது வாலிபர் இரும்பு கம்பியால் உடைத்ததில், ஏ.டி.எம். எந்திரம் சேதமடைந்திருந்தது.

இதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் பெண்ணாடத்தில் கியாஸ் சிலிண்டருடன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெண்ணாடம் அருகே உள்ள நந்தபாடியை சேர்ந்த பெரியசாமி மகன் அரங்கநாதன்(35) என்பதும், அவர் ஏற்கனவே திருடிய மொபட்டில் இறையூருக்கு வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், அங்கு பொதுமக்கள் விரட்டியதால் தப்பி சென்று கூடலூரில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டரை திருடிக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது.

மேலும் பெண்ணாடம் பகுதியில் இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் திருடிய வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரங்கநாதனை கைது செய்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை 2 மணி நேரத்துக்குள் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story