ஊட்டி, கோத்தகிரியில் பலத்த மழை
ஊட்டி, கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது.
ஊட்டி,
ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியம் 2 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடாமல் அரை மணி நேரம் பெய்தது. மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் பகுதி, சேரிங்கிராஸ் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். தாவரவியல் பூங்காவில் பல இடங்களில் மலர் செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மழையால் மலர் செடிகள் அழுகாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் மீது பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்படுகிறது.
இதேபோன்று கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் பெய்தது. முட்டைக்கோஸ் பயிர்கள் மீது ஆலங்கட்டிகள் விழுந்ததால், அவை சேதமடைந்து இருக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், வெள்ளைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், பயிர்கள் அழுக வாய்ப்புள்ளதாக கூறினர். காவிலோரை, வ.உ.சி நகர், ஓடேன்துறை வழியாக செல்லும் நீரோடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகிலுள்ள தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. உடனே கால்வாய் அமைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
எடக்காடு, முள்ளிகூர், பிக்கட்டி, காந்தி கண்டி, மஞ்சூர், எமரால்டு, இத்தலார், தங்காடு, மணியட்டி, பாலகொலா, காத்தாடி மட்டம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story