ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்குப்பதிவுக்கு பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி உத்தரவு


ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்குப்பதிவுக்கு பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி உத்தரவு
x
தினத்தந்தி 12 May 2019 3:45 AM IST (Updated: 12 May 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களை மட்டுமே வாக்குப்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி, 

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களை மட்டுமே வாக்குப்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.

நுண்பார்வையாளர்கள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:-

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை மட்டும்தான் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இதனை நீங்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

17-யு பதிவேட்டில் வாக்காளர்களின் வரிசை எண் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் இருந்தால் உடனடியாக பொது பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் நீங்கள் உதவ வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் அறைக்கு வெளியேதான் வாக்காளர்கள் வரிசையில் நிற்க வேண்டும்.

வாக்குப்பதிவு நடைபெறும்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் மண்டல அலுவலர்களுக்கு தெரிவித்து புதிய வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுது ஏற்பட்ட எந்திரம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 257 வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து அலுவலர்களுடன் நீங்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், மகளிர் திட்டம் அலுவலர் ரேவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மரகதநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், தேர்தல் தனி தாசில்தார் நம்பிராஜன் மற்றும் நுண் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story