ஜிப்மரில் பணியிடங்களில் புதுவையை சேர்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்


ஜிப்மரில் பணியிடங்களில் புதுவையை சேர்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 May 2019 4:15 AM IST (Updated: 12 May 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஜிப்மரில் நியமிக்கப்பட உள்ள பணியிடங்களுக்கு புதுவையை சேர்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பதவிகளில் பணிபுரிவதற்காக ஆட்களை நியமிக்க இருப்பதாக விளம்பரங்கள் வெளிவந்துள்ளன. இந்த பணிகளுக்கு அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு விதிகளின்படி பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி, மற்றும் இ.பி.சி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களில் புதுவையை சேர்ந்த தகுதி உள்ளவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவில்லை. இது புதுவை மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் உரிய பங்கீடு மற்றும் உரிமையை பறிப்பதோடு இந்த மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் மத்திய நிறுவனமாக இருந்தாலும் அதன் வளர்ச்சியால் புதுவை மக்களும் வளர்ச்சி பெற வேண்டும். கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படுவது போல் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கும் போது அது புதுவை இளைஞர்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும் செயலாக அமையும்.

ஒரு காலத்தில் புதுவையில் உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாத நேரத்தில் இங்கே போதுமான கல்வித்தகுதி உள்ளவர்கள் இல்லை. எனவே வெளிமாநிலங்களில் இருந்து இங்கு பணியமர்த்தப்பட்டனர். ஆனால் தற்போது புதுவையில் மத்திய பல்கலைக்கழகமும், உயர்கல்வி நிறுவனங்களும் உருவான பின்னர் உயர்கல்வி பயின்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். போட்டித்தேர்வின் மூலமாகவே ஊழியர்களை தேர்வு செய்வதால் நல்ல திறமை உள்ளவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும்.

எனவே தற்போது நியமனம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பதவிகளில் புதுவையை சேர்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சி பிரிவு பணிகளில் 100 சதவீதமும், பி பிரிவு பணிகளில் 50 சதவீதமும், ஏ பிரிவு பணிகளில் 25 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story