ஜோலார்பேட்டை அருகே தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை


ஜோலார்பேட்டை அருகே தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 8:10 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரின் படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஜோலார்பேட்டை, 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கவிதா தண்டபாணி. தி.மு.க. மாவட்ட மகளிரணி அமைப்பாளரான இவர் நேற்று அதிகாலை சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக சென்றார்.

அப்போது அவரது வீட்டின் மாடியின் ஒரு அறையில் தங்கியுள்ள அவரது உதவியாளரான ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த திருமலை மற்றும் குடும்பத்தினர் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்றனர். திருமலை மாடிக்கு செல்லாமல் கீழே உள்ள அறையிலேயே தூங்கி உள்ளார்.

காலையில் எழுந்து மேல் அறைக்கு சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 5½ பவுன் நகை, ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் வராண்டாவில் பொருத்தப்பட்டு இருந்த எல்.இ.டி. டி.வி. ஆகியவை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கீழே வந்து கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று பணம், நகை மற்றும் டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story