பாளையங்கோட்டையில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தனியார் பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கலெக்டர் ஷில்பா தலைமையில் இந்த ஆய்வு பணிகள் நடந்தது.
நெல்லை,
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தனியார் பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கலெக்டர் ஷில்பா தலைமையில் இந்த ஆய்வு பணிகள் நடந்தது.
பாதுகாப்பு அம்சங்கள்
பள்ளிக்கூட வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் சிறப்பு விதி-2012 அரசாணையின் படி, தனியார் பள்ளிக்கூட வாகனங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 18 வகையான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பள்ளிக்கூட வாகனங்களில் அனுமதி சீட்டு இல்லாமல் குழந்தைகளை ஏற்றி இறக்க கூடாது. குறைந்தபட்சம் ஓட்டுனர் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். ஓட்டுனர்கள் அதிக வேகம் மற்றும் மதுபோதையில் வாகனங்களை இயக்க கூடாது. பள்ளிக்கூட வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி மற்றும் அவசர வழி கட்டாயம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 பாதுகாப்பு அம்சங்கள் தமிழக அரசாணையில் இடம் பெற்றுள்ளன.
பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,153 பள்ளிக்கூட வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. அவற்றை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக தனியார் பள்ளிக்கூட வாகனங்களின் டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசுகையில், “தனியார் பள்ளிக்கூடங்கள் சேவை நோக்கத்தில் செயல்பட வேண்டும். வணிக நோக்கத்தில் பள்ளிக்கூடங்களை நடத்த கூடாது. பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும்போது, வருங்கால இந்தியாவை உருவாக்கும் இளைய சமுதாயத்தினரை அழைத்து செல்கிறோம் என்ற உணர்வோடு வாகனத்தை பாதுகாப்புடன் இயக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு ஏற்பட்டால்கூட விபத்து நேரிட வாய்ப்பு உண்டு. எனவே டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். டிரைவர்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்துதல் தொடர்பாக புகார் எழுந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பேசுகையில், “ஒரு டாக்டர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு தேவையான உபகரணங்களை வைத்து இருப்பார். சம்பந்தப்பட்ட டாக்டர் நன்றாக ஓய்வு எடுத்து ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும். அதுபோல் பள்ளிக்கூட வாகன டிரைவர்களும் போக்குவரத்து விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு, வாகனங்களை ஓட்ட வேண்டும். சரியாக சாலையை கடந்து குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்“ என்றார்.
இந்த ஆய்வில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
தகுதி சான்று ரத்து
நேற்று 222 தனியார் பஸ்கள் ஆய்வு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 39 பஸ்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அந்த பஸ்களுக்கு தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. குறைபாடுகளை சரி செய்து விட்டு மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story