ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து நான் விலகவில்லை ‘தேவேகவுடா என்னை நீக்கினார்’ சித்தராமையா பரபரப்பு பேட்டி
“ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நானாக விலகி காங்கிரசில் சேரவில்லை. கட்சியில் இருந்து தேவேகவுடா நீக்கியதால் காங்கிரசில் சேர்ந்தேன்” என்று சித்தராமையா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
“ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நானாக விலகி காங்கிரசில் சேரவில்லை. கட்சியில் இருந்து தேவேகவுடா நீக்கியதால் காங்கிரசில் சேர்ந்தேன்” என்று சித்தராமையா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல கோடி ரூபாய்...
கர்நாடகத்தில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சிஞ்சோலி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் தற்போது உமேஷ் ஜாதவின் மகன் அபினாஷ் ஜாதவ் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.
இதனால் சிஞ்சோலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று, அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜனதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு காங்கிரசில் இருந்து விலகி விட்டதாகவும், காங்கிரசின் முதுகில் உமேஷ் ஜாதவ் குத்திவிட்டதாகவும் தேர்தல் பிரசாரத்தின்போது சித்தராமையா கூறி இருந்தார்.
சித்தராமையா காங்கிரசில் சேர்ந்தார்
இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜனதாைவ சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “உமேஷ் ஜாதவுக்கு பா.ஜனதா பணம் எதுவும் கொடுக்கவில்லை. அவருக்கு மந்திரி பதவி வழங்காததால் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். சித்தராமையா கூட முதலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து முதல்-மந்திரி ஆகி உள்ளார்.” என்றார்.
இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் சிஞ்சோலியில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
தேவேகவுடா வெளியேற்றினார்
“ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நான் விலகி, காங்கிரசில் சேர்ந்ததற்கும், உமேஷ் ஜாதவ் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்ததற்கும் வித்தியாசம் உள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நான் விலகவில்லை. அக்கட்சியில் இருக்கும் போது பல்வேறு அமைப்புகளுக்கு ஆதரவாக நான் இருந்தேன். அதனால் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து என்னை, தேவேகவுடா நீக்கினார்.
நானாக ஜனதாதளம்(எஸ்)கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேரவில்லை. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்பு தேர்தலை எதிர் கொண்டு வெற்றி பெற்றேன். இதுபற்றி எல்லாமல் தெரியாமல் அசோக் பேசி வருகிறார். அவர் தனது வாய்க்கு வந்ததை பேசியுள்ளார். பா.ஜனதாவினர் பொய் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
உமேஷ் ஜாதவுடன் என்னை ஒப்பிட்டு அசோக் பேசியுள்ளார். காங்கிரசில் உமேஷ் ஜாதவுக்கு எல்லா பதவியும் வழங்கப்பட்டது. முதல் முறையாக அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும், பாராளுமன்ற குழு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டார். பரமேஸ்வர் நாயக் ஏற்கனவே மந்திரி பதவி கேட்டு வந்ததால், அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
மந்திரி பதவி வழங்க 2 ஆண்டுகள் பொறுத்திருக்கும்படி உமேஷ் ஜாதவிடம் கூறினேன். அதற்கு முன்பாக வாரிய தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார். அவர் எத்தனை கோடி வாங்கினார்? என்பது சிஞ்சோலி தொகுதி மக்களுக்கு தெரியும். உமேஷ் ஜாதவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஆட்சிக்கு பிரச்சினை இல்லை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எடியூரப்பா கூறியுள்ளார். பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பதால், எடியூரப்பா அவ்வாறு பேசுகிறார். 20 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதாவிடம் பணம் உள்ளதா? என்பது பற்றி அமித்ஷா, எடியூரப்பா கூற வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு முன்பாக பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் முதலில் அனுமதி வழங்கி இருந்தார்.
ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதா தவறி விட்டதால் 3 நாட்கள் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் நீடித்த எடியூரப்பா பின்னர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். அன்றில் இருந்து பா.ஜனதாவுக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். பதவி ஆசையில் எடியூரப்பா அப்படி பேசி வருகிறார். காங்கிரசில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. பா.ஜனதாவுக்கு எந்த எம்.எல்.ஏ.வும் செல்ல மாட்டார்கள். கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவினரின் எண்ணம் நிறைவேறாது.”
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story