ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை குமாரசாமியை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க சித்தராமையா முயற்சி எடியூரப்பா குற்றச்சாட்டு


ஆட்சியை கவிழ்க்க  முயற்சிக்கவில்லை குமாரசாமியை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க சித்தராமையா முயற்சி எடியூரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்கவில்லை என்றும், குமாரசாமியை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க சித்தராமையா மறைமுகமாக முயற்சி செய்து வருவதாக எடியூரப்பா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்கவில்லை என்றும், குமாரசாமியை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க சித்தராமையா மறைமுகமாக முயற்சி செய்து வருவதாக எடியூரப்பா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

எடியூரப்பா பிரசாரம்

தார்வார் மாவட்டத்தில் உள்ள குந்துகோல் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் சிக்கனகவுடா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக எடியூரப்பா பிரசாரம் செய்து வருகிறார். நேற்று 2-வது நாளாகவும் அவர் குந்துகோல் தொகுதியில் பிரசாரம் செய்தார்.

பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்களுக்கு பிடிக்கவில்லை

முதல்-மந்திரியாக குமாரசாமி இருப்பது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு பிடிக்கவில்லை. அந்த எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணி ஆட்சியில் பெரிய மோதல் வெடிப்பது உறுதி. அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜனதா என்ன செய்ய வேண்டுமோ?, அதனை செய்யும்.

கூட்டணி அரசில் ஏராளமான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சிக்கான பணிகளை அரசு செய்யவில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. இந்த கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்று குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க்களே நினைக்கின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எடுக்கும் முடிவை பொறுத்தே, பா.ஜனதாவின் நிலைப்பாடு இருக்கும்.

சித்தராமையா முயற்சி

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் பலவந்தமாக இழுக்க முயற்சிக்கவில்லை. அவர்களே பா.ஜனதாவுக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா, துமகூரு, ஹாசன் தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தோல்வி அடைவது உறுதி. மைசூரு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பிரதாப் சிம்ஹா வெற்றி பெறுவார். அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி ெபறுவதன் மூலம் கூட்டணி தலைவர்களுக்கு இடையே மோதல் அதிகரிக்கும். கூட்டணி ஆட்சி தொடருவதில் ஏராளமான எம்.எல்.ஏ.க்களுக்கு விருப்பம் இல்லை.

குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் குமாரசாமியை பதவியில் இருந்து நீக்க சித்தராமையா மறைமுகமாக முயற்சித்து வருகிறார். இதனால் தான் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்று கூறி வருகின்றனர்.

ஆட்சியை கவிழ்க்க...

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யவில்லை. அதுபோன்ற பிம்பத்தை கூட்டணி கட்சி தலைவர்களே உருவாக்கி வருகின்றனர். சிஞ்சோலி, குந்துகோல் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story