தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
கோடைவிடுமுறைக்கு பின்னர் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். இதையொட்டி அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கரூர் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்க வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி தனியார் பள்ளி வேன், பஸ் உள்ளிட்ட 400 வாகனங்கள் ஆய்வுக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு தயாராக இருந்தன. கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமையில் கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன், கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரவிசந்திரன், கோவிந்தராஜ், ஆனந்த், தனசேகரன், மீனாட்சி ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பள்ளி வாகனங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தனியார் பள்ளி வாகனங்களில் அவசரகால கதவுகள் தடையின்றி எளிதில் திறக்கும்படி இருக்கிறதா? வாகன இருக்கைகள் எவ்வித சேதாரமமும் இன்றி உள்ளதா? குழந்தைகள் எளிதில் வாகனங்களில் ஏறி, இறங்கும் வகையில் படிகட்டுகள் சேதமின்றி அமைக்கப்பட்டு இருக்கிறதா? முதலுதவி உபகரண பெட்டியில் மருந்துகள் காலாவதியாகாமல் இருக்கிறதா? வாகனத்தின் முன்-பின் ஒளிரும் விளக்குகளின் நிலை உள்ளிட்டவை பற்றி பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சிறு, சிறு குறைகள் கண்டறியப்பட்ட சில வாகனங்களுக்கு, அதனை சரி செய்து மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து காண்பிக்குமாறு நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வாகன டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறதா? என்பதை டிரைவர்களிடம் கேட்டறிந்து சாலைவிதிகளை பின்பற்றி மிதவேகமாக வாகனத்தை இயக்க வேண்டும். முந்தி செல்ல முற்படக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அப்போது வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்படின், அதனை தீத்தடுப்பான் உபகரணத்தை கொண்டு எப்படி அணைப்பீர்கள்? என டிரைவர்களிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டனர். உடனே வாகனத்திலுள்ள தீத்தடுப்பணை இயக்கி டிரை கெமிக்கல் பவுடரை பீய்ச்சி அடித்து தீயை விரைந்து அணைப்பது குறித்து டிரைவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளி வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வு தொடர்பாக கரூர் வட்டார போக்குவரத்து துறையினரிடம் கேட்ட போது, பள்ளிகள் விடுமுறை மாதமான மே மாதத்தில் வருடந்தோறும், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம் தான். இதில் பங்கேற்க தவறியவர்கள் விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் வாகனங்களை எடுத்து வந்து தணிக்கை உட்படுத்திய பிறகு தான் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story