‘நிகில் எல்லிதியப்பா’ என்ற தலைப்பில் படம் எடுத்தால் நான் ஹீரோ, மந்திரி சி.எஸ்.புட்டராஜு தயாரிப்பாளர் நிகில் குமாரசாமி பேச்சு


‘நிகில் எல்லிதியப்பா’ என்ற தலைப்பில் படம் எடுத்தால் நான் ஹீரோ, மந்திரி சி.எஸ்.புட்டராஜு தயாரிப்பாளர் நிகில் குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 12 May 2019 4:15 AM IST (Updated: 12 May 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

‘நிகில் எல்லிதியப்பா’ என்ற தலைப்பில் படம் எடுத்தால் நான் ஹீரோ, மந்திரி சி.எஸ்.புட்டராஜு தயாரிப்பாளர் என நிகில் குமாரசாமி நையாண்டியாக கூறினார்.

பெங்களூரு, 

‘நிகில் எல்லிதியப்பா’ என்ற தலைப்பில் படம் எடுத்தால் நான் ஹீரோ, மந்திரி சி.எஸ்.புட்டராஜு தயாரிப்பாளர் என நிகில் குமாரசாமி நையாண்டியாக கூறினார்.

நிகில் குமாரசாமி

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நாடாளுமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

ஒரு நிகழ்ச்சியில், மேடையில் இருந்த நிகில் காணாததை கண்டு அவரது தந்தையும், முதல்-மந்திரியுமான குமாரசாமி ‘நிகில் எல்லிதியப்பா’ (நிகில் எங்கே இருக்க) என கேள்வி எழுப்பினார்.

‘நிகில் எல்லிதியப்பா’

இந்த வார்த்தையை பிடித்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது சுமலதா ஆதரவாளர்கள், ‘நிகில் எல்லிதியப்பா’ என அடிக்கடி கூறி கிண்டலடித்தனர். அதன் மூலம் ‘நிகில் எல்லிதியப்பா’ என்ற வார்த்தை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டது.

அதுபோல் தேர்தல் பிரசாரத்தின் போது சுமலதா, “நான் மண்டியா சொஷே” (மண்டியா மருமகள்) என கூறி வாக்கு சேகரித்தார். இந்த வார்த்தையும் பிரபலமாகிவிட்டது. இதற்கிடையே மண்டியா தேர்தல் பிரசாரத்தின் போது அதிகமாக உச்சரிக்கப்பட்ட ‘நிகில் எல்லிதியப்பா’, ‘மண்டியா சொஷே’ என்ற வார்த்தைகளை சிலர் கன்னட திரைப்பட தலைப்பாக முன்பதிவு செய்தனர்.

நான் ஹீரோ, புட்டராஜு தயாரிப்பாளர்

இந்த நிலையில், மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மந்திரி சி.எஸ்.புட்டராஜு, மண்டியா ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் நிகில் குமாரசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய நிகில் குமாரசாமி, நிகில் எல்லிதியப்பா என்ற தலைப்பில் யாராவது படம் எடுக்க முன்வந்தால், அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். அந்த படத்தை மந்திரி சி.எஸ்.புட்டராஜு தயாரிப்பார் என நையாண்டியாக கூறினார்.

2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

தொடர்ந்து அவர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் நான் மண்டியா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. மண்டியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும், கட்சியினரும் என்னை வேட்பாளராக நிறுத்தும்படி வலியுறுத்தியதன் பேரில் கட்சி மேலிடம் என்னை இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவால் நான் அரசியலில் வளர்வதை தடுக்க முடியாது. நான் கடந்த 20 ஆண்டுகளாகவே அரசியலை பார்த்து வளர்ந்து வருகிறேன். இதற்கு முன்பு ஏராளமான தேர்தல்களை நான் கண்டுள்ளேன். ஆனால் தற்போது நான் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்.

மண்டியா தொகுதியில் நான் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இது எனது வெற்றி அல்ல. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் 45 நாட்களாக கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கான வெற்றியாக இந்த தேர்தல் முடிவு இருக்கும். அதுபோல் மண்டியா மாவட்டத்தில் உள்ள நமது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக எனக்காக தேர்தல் பணியாற்றினர். இதை எனது உயிர்மூச்சு இருக்கும் வரை மறக்கமாட்டேன்.

டீ குடிக்க வரவில்லை

நான் மண்டியாவுக்கு டீயோ அல்லது காபியோ குடிக்க வரவில்லை. தேர்தல் முடிந்ததும் நான் ஓய்வெடுத்து வருவதாகவும், 15 நாட்களாக அவர் மண்டியா பக்கம் வரவில்லை எனவும் எனக்கு எதிராக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. நான் மண்டியாவில் ஸ்மார்ட் பள்ளி அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தேன். சிலரை போல் நான் டீ குடிக்கவோ, காபி குடிக்கவோ மண்டியா வரவில்லை” என்றார்.

(அதாவது, நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக் தேர்தல் முடிந்த பிறகு சிங்கப்பூர் செல்ல இருப்பதாக வெளியான தகவலை அடுத்து மண்டியா சென்று டீ குடித்தார். அவரை தாக்கும் விதமாக நிகில் மறைமுகமாக பேசினார்.)

Next Story