தஞ்சை ராஜீவ்நகரில், குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சை ராஜீவ்நகரில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகரில் 51 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் 120 டன் குப்பைகளும் இந்த கிடங்கில் தான் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைக்கிடங்கு குப்பைகளால் நிரம்பி விட்டது. குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை நகரில் 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை ராஜீவ்நகரில் சிறுவர்களுக்கான பூங்காவில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணி தொடங்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள், சிறுவர்களுக்கான பூங்காவில் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கே குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். எனவே வேறு இடத்தில் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதை கேட்ட போலீசார், அங்கு வந்திருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசித்தனர். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு ராஜீவ்நகரை சேர்ந்த மக்கள் சென்றனர். அவர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராஜீவ்நகரில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் போராட்டம் நடத்துவோம் என மக்கள் தெரிவித்தனர்.
உங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரை சந்தித்து கொடுங்கள் என ஆணையர் அறிவுறுத்தினார். இதையடுத்து ராஜீவ்நகரை சேர்ந்த மக்கள் ஆவேசமாக மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். பூக்கார தெரு விளார்சாலையில் உள்ள மாரிகுளம் சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டப்படி நாளை(திங்கட்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என பூக்கார விளார்சாலை பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






