வெயில் கொடுமை தாங்காமல் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு


வெயில் கொடுமை தாங்காமல் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 12 May 2019 4:30 AM IST (Updated: 12 May 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரேஷன் கடையில் காத்திருந்த மூதாட்டி வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கொண்டலாம்பட்டி,

சேலத்தில் வெயில் 100 டிகிரிக்கு மேல் அடித்து வந்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து சேலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குளிர்பான கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். காலை நேரத்தில் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைவாகவே உள்ளது. நேற்று சேலத்தில் 104 டிகிரி வெயில் அடித்தது.

இந்த நிலையில் வெயில் கொடுமை தாங்காமல் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி நடுத்தெரு பகுதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 68), நேற்று பொருட்கள் வாங்குவதற்காக அந்த ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

காலை சுமார் 11 மணியளவில் கடைக்கு வந்தவர், பிற்பகல் 2 மணி வரை வெயிலில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெயிலின் கொடுமை தாங்காமல் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story