உஷாரய்யா உஷாரு


உஷாரய்யா உஷாரு
x
தினத்தந்தி 12 May 2019 10:26 AM GMT (Updated: 12 May 2019 10:26 AM GMT)

அவள் வயது 24. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள்.

பார்க்க சுமாரான தோற்றம் கொண்டவள். அழகான தோற்றம்கொண்ட அவளது அக்காளுக்கு 28 வயது. மூன்று வருடங் களுக்கு முன்பு அக்காளுக்கு திருமணம் நடந்தது. அவள் தனது கணவரோடு அவர் வேலை பார்க்கும் ஊரில் வசித்து வரு கிறாள். அவர்களுக்கு குழந்தை இல்லை.

தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் தங்கை தனிமை விரும்பி. குடும்பத்தில் யாரிடமும் அதிக நெருக்கம் காட்டமாட்டாள். அவளுக்கு தோழிகள் வட்டமும் கிடையாது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். ஆனால் அவளது அக்காள் கணவர் ரொம்ப ஜாலியான டைப். தனது கொழுந்தியாரிடம் அவர் ரொம்ப உரிமை எடுத்து கேலி கிண்டல் செய்து கலகலப்பாக பேசுவார். பெரும்பாலும் அவர்கள் இருவரும் போனில் மட்டுமே பேசிக்கொள்வார்கள்.

அவள் திடீரென்று ஒருநாள், ‘அக்காளை பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று நாலைந்து நாட்கள் லீவு எடுத்துவிட்டு, கிளம்பிச் சென்றாள். அக்காள் வசிக்கும் இடம் 80 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. அக்காள் வீட்டிலும் அவளால் நிம்மதியாக தங்கமுடியவில்லை. ஒன்றிரண்டு நாட்களை கழித்துவிட்டு திரும்பிவந்துவிட்டாள்.

திரும்பி வந்த நாளில் இருந்து அவளிடம் இயல்புக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டன. வழக்கமான வேலைகளைகூட செய்ய முடியாமல் தடுமாறினாள். இரவில் தூங்கமுடியாமல் அவதிப்பட்டாள். காலையில் வெகுதாமதமாக விழித்தாள். அடிக்கடி வேலைக்கு லீவு போட்டாள். அடுத்த சில வாரங்களில் அவள் சந்தேகத்திற்கிடமான முறையில் வாந்தி எடுத்தாள். ‘தனது இளைய மகளுக்கு என்ன ஆனது?’ என்று தாயார் மனம் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில், அவள் அந்த அதிர்ச்சிக் குண்டை தூக்கிப்போட்டாள். ‘தனது வயிறு பெரிதாகிக்கொண்டிருக்கிறது’, என்றும் ‘மார்பகங்களில் இருந்து அவ்வப்போது பால் வந்துகொண்டிருக்கிறது’ என்றும் சொன்னாள்.

அவள் சொன்னதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது. அவளிடம் கர்ப்பிணி பெண்ணுக்குரிய வெளிப்படையான சில மாற்றங்களும் தெரிந்ததால், அவள் கர்ப்பமாகிவிட்டாள் என்ற முடிவுக்கு குடும்பத்தினர் வந்துவிட்டார்கள். உடனே அவளை பிடித்து உலுக்கி, கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று கேட்டதும், அவள் தனது அக்காள் கணவரை நோக்கி கையை நீட்டிவிட்டாள். ‘அவர்தான் அதுக்கு காரணம்..’ என்றாள்.

குடும்பத்தினர் அனைவரும் உறைந்துபோய், ‘அடப்பாவி இப்படி பண்ணிட்டியே!’ என்று அவரை அடிக்க பாய, அவரோ ‘எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. எனது சகோதரியாகத்தான் நினைத்து அவளிடம் பழகுகிறேன். நான் அவளை தொட்டதுகூட கிடையாது. எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் வந்து சத்தியம் செய்கிறேன்’ என்றார். அக்காளும், ‘எனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை. இவள் வேறு யாரிடமோ ஏமாந்திருக்கிறாள்’ என்றாள்.

குடும்பத்தில் உள்ள சிலரும், ‘அவர் நல்லமனிதர்’ என்பதுபோல் பேசி, அவள் மீது சந்தேகம்கொண்டு குற்றம்சாட்டும் விதத்தில் பேச, அவள் திடீரென்று உடலில் கத்தியால் கீறி, தற்கொலைக்கு முயன்றாள். அவளை காப்பாற்றி மன நல நிபுணர் ஒருவரிடம் அழைத்துச்சென்றபோது இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது.

அவள் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அக்காள் கணவர் தன்னிடம் போனில் சகஜமாக பேசியதை மனதில்வைத்துக்கொண்டு அவளே சில மாய பிம்பங்களை உருவாக்கி, அவற்றை நிஜம்போல் நம்பியிருக்கிறாள். அவர், அவள் மீது ஆசைகொள்வதுபோலவும், இருவரும் வெளியே ஒன்றாக ஊர்சுற்றுவது போலவும், ஒரே அறையில் தங்குவது போலவும் காட்சிகளை உருவாக்கி, அப்படியே அவற்றை உண்மைபோல் ஆக்கி, அதற்கு தக்கபடி தனது உடல்- மனநிலையை மாற்றியிருக்கிறாள். அதனால் கர்ப்பமாகிவிட்டதை போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

அவள் கர்ப்பமடையவில்லை என்பது மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. மிக அரிதாக ஒரு சில பெண்களுக்கு தாய்மைக்கு முன்பே மார்பில் இருந்து பால் வரும் என்ற உண்மையும் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்போது அந்த இளம்பெண் தொடர்ந்து மன நல சிகிச்சை பெற்றுவருகிறாள்.

மனச்சிதைவு நோய்க்குள் இப்படிப்பட்ட போலி கர்ப்பம் போன்ற பிரச்சினைகளும் ஒளிந்திருப்பதை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்!

Next Story