சேலத்தில் மாம்பழ சீசன் களை கட்டியது வியாபாரிகள் மகிழ்ச்சி


சேலத்தில் மாம்பழ சீசன் களை கட்டியது வியாபாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2019 4:30 AM IST (Updated: 12 May 2019 8:49 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம், 

மாம்பழம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சேலம் மாம்பழம் தான். அந்த அளவுக்கு சேலத்து மாம்பழம் தனிருசியை கொண்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி களை கட்டி உள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு வரகம்பாடி, வாழப்பாடி, பேளூர், கருமந்துறை உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு மாம்பழம், நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அங்கு இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம் வ.உ.சி.மார்க்கெட், கடை வீதி, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் ஏராளமான வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் ஆர்வமாக மாம்பழங்களை அதிக அளவில் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாம்பழ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

மாம்பழத்தின் ரகத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கொல்கத்தா, மும்பை உள்பட முக்கிய நகரங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழங்களின் வரத்து குறைந்துள்ளது. சரியாக மழை பெய்யாதது, அதிகப்படியான காற்று வீச்சு உள்ளிட்ட காரணங்களால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 50 டன் விற்பனையாகும் மாம்பழம், தற்போது 25 டன் என பாதிக்கு பாதி குறைந்துள்ளது. வரத்து குறைவாக இருந்தபோதிலும் மாங்காய் விலை உயரவில்லை.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் பெங்களூரா, இமாம் பசந்த், மல்கோவா ஆகியவை ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரைக்கும், பங்கனப்பள்ளி மாம்பழம் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரைக்கும், கிளிமூக்கு, செந்தூரா வகை மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story