பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலையில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலையில் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. எப்போதும் இந்த பங்க்கில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்களுக்கு வசதியாக பெட்ரோல் பங்க் வளாகத்தில், சூப்பர் மார்க்கெட், உணவகம் என பல கடைகள் உள்ளன. நேற்று காலை 8.30 மணியளவில் பூட்டி இருந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனை பார்த்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்கு தகவல் தந்தனர். அதற்குள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தீ மளமளவென எரிவதை கண்டதும் அவசரகால தீயணைக்கும் கருவி முலம் தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் கிண்டி, தேனாம்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் கடைக்குள் பிடித்த தீ பெட்ரோல் பங்கிற்கு பரவாமல் போராடி அணைத்தனர். இதில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த உணவுப்பொருட்கள் மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது. கடைக்குள் ஏற்பட்ட மின் கசிவே தீவிபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது. விரைவாக செயல்பட்டதால் பெட்ரோல் பங்கில் தீ பரவவில்லை. இதனால் பெட்ரோல் பங்க் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

இல்லையென்றால் பெரும்விபத்து ஏற்பட்டு இருக்கும். இது பற்றி தீயணைப்பு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தீ விபத்து காரணமாக பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story