சின்னகல்லப்பாடியில் 4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிடம் விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


சின்னகல்லப்பாடியில் 4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிடம் விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 May 2019 3:30 AM IST (Updated: 12 May 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

சின்னகல்லப்பாடியில் 4 ஆண்டுகளாக கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம், 

தமிழகம் முழுவதும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து, அதற்காக விளக்கம் அளிப்பதற்கு வசதியாக ஒவ்வொரு கிராமங்களில் தனித்தனியாக கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சின்னகல்லப்பாடியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டபோது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் கட்டிடம் கட்டும் பணியில் மந்தநிலை ஏற்பட்டது.

தற்போது 4 ஆண்டுகளாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் முழுமை பெறவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சுற்றுவட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு அவை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மாதத்திற்கு ஒருநாள் மட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இங்கு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள கட்டிடத்தை இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கால்நடை கட்டுவதும், சமூகவிரோதிகள் மது அருந்துவதும் வாடிக்கையாக உள்ளது.

மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படும் வகையில் கிராம சேவை மைய கட்டிடத்தை விரைவாக முடித்து திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story