கணவர் அதிக பாசம் காட்டியதால் 2-வது மனைவியின் கழுத்து அறுப்பு முதல் மனைவி கைது


கணவர் அதிக பாசம் காட்டியதால் 2-வது மனைவியின் கழுத்து அறுப்பு முதல் மனைவி கைது
x
தினத்தந்தி 13 May 2019 5:00 AM IST (Updated: 12 May 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

கணவர் அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட தகராறில் 2-வது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்குன்றம்,

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ரஷீத். இவர், செங்குன்றத்தை அடுத்த பாலவாயலில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், வங்காள தேசத்தை சேர்ந்த சுராகாத்தூண் (வயது 28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ரேஷ்மி (7) என்ற மகளும், முகமது ஷஜின் (3) என்ற மகனும் உள்ளனர்.

சுராகாத்தூணின் உறவுப்பெண் ஜெரினா பேகம்(25). வங்காள தேசத்தை சேர்ந்த இவருக்கு, சென்னையில் மாப்பிள்ளை பார்ப்பதற்காக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் அவருக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சுராகாத்தூண், “எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. எனவே எனது கணவரை நீ, 2-வது திருமணம் செய்துகொள்” என ஜெரினாபேகத்திடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை வந்த சில மாதங்களிலேயே ஜெரினாபேகத்தை முகமது ரஷீத் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெஷ்மி(5) என்ற மகள் உள்ளார். தற்போது ஜெரினாபேகம் 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

திருமணத்துக்கு பிறகு முகமது ரஷீத் 2-வது மனைவி ஜெரினாபேகம் மீது அதிக பாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று காலை முகமது ரஷீத் வேலைக்கு சென்று விட்டார். வழக்கம்போல் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுராகாத்தூண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெரினாபேகத்தின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெரினாபேகம் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புழல் உதவி கமிஷனர் ரவி, செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சுராகாத்தூணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் கர்ப்பிணி என்றும் பாராமல் கணவரின் 2-வது மனைவியின் கழுத்தை முதல் மனைவி அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story