கிருஷ்ணகிரி அருகே கி.மு.500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பதுக்கை கண்டுபிடிப்பு


கிருஷ்ணகிரி அருகே கி.மு.500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பதுக்கை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 May 2019 11:30 PM GMT (Updated: 12 May 2019 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே கி.மு.500 ஆண்டுகளுக்குமுந்தைய காலத்தை சேர்ந்த கல்வட்டங்களோடு கூடிய கற்பதுக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று காலத்திற்கு முந்தைய பெருங்கற்படைக்கால மக்களின் நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளது. முக்கியமாக கல்திட்டைகள், கல் வட்டங்கள், குத்து கற்கள், கற்பதுக்கைககள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரிகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இங்கு உள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் வற்றியது.

இதையடுத்து, நீர்த்தேக்க பகுதியான பழைய பேயனப்பள்ளி கிராமத்தின் அருகில் உள்ள சிறு குன்றின் மேற்கு பகுதியில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெருங்கற் படைக்கால பண்பாட்டை சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

பொதுவாக 3 பக்கங்களில் செங்குத்தான பலகை கற்களும், மேல் தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கிறது. இதன் கிழக்கு பகுதியில் உள்ள கல்லில் மட்டும் இடுதுளை காணப்படுகிறது. உடைந்த நிலையில் இருந்தாலும் கிழக்கு நோக்கிய கல்லில் துளை இருப்பது உடைந்த கற்பலகைகளில் இருந்து தெரிய வருகிறது. இங்கு 30 ஏக்கர் பரப்பளவில் சின்னங்கள் அமைந்துள்ள மையப்பகுதியில் 150 அடி நீளம், 150 அடி அகலத்தில் எல்லை போன்ற கற்களை அடுக்கி வைத்துள்ளனர்.

அத்துடன் இதில் 12 அடி நீளமும், 8 அடி அகலமும், 1.25 அடி உயரமும் உள்ள மிகப்பெரிய மூடுகல்லினை கொண்டு கற்பதுக்கை அமைந்துள்ளது. இது ஒரு தலைவனுக்கான ஈமச்சின்னம் என்பதை காட்டுகிறது. மேல் உள்ள மூடு கல்லின் எடை 2 டன் இருக்கும். அணை கட்டப்பட்ட பின் நீர்சூழ்ந்து அந்த இடம் தண்ணீரால் மேல் மூடு கல் அதிக எடை காரணமாக மற்ற 4 கல்லையும் கீழ் அழுத்தி, நில மட்டத்துக்கு சமமாக கீழ் இறங்கிவிட்டது.

இப்பகுதி மற்றும் பகுதிகளை விட சற்று மேடாகவும் உள்ளது. அண்மையில் சிதைக்கப்பட்டுள்ள ஒரு கற்பதுக்கையின் மையத்தில் கருப்பு சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண ஈமக் கலயங்களின் ஓடுகளும், இதை சுற்றி வட்ட வடிவில் கல்வட்டங்களும் காணப்படுகின்றன. இவைகள் கி.மு.500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. அதாவது 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வட்டங்களோடு கூடிய கற்பதுக்கை ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன், பிரகாஷ், விஜயகுமார், டேவீஸ், ரவி, மதிவாணன் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story