எஸ்.வாழவந்தி ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
எஸ்.வாழவந்தி ஏரியில் கோழி இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.வாழவந்தி ஊராட்சியில் எஸ்.வாழவந்தி, சின்னக்கரசப்பாளையம், மேலப்பட்டி, கே.ராசாம்பாளையம் ஆகிய 4 ஊர்களுக்கும் மத்தியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் எஸ்.வாழவந்தி ஏரி உள்ளது.
எஸ்.வாழவந்தியிலிருந்து மேலப்பட்டி, கே.ராசாம்பாளையம், காளிபாளையம், பொன்னேரிப்பட்டி, கீழ்சாத்தாம்பூர் கோனூர், கீரம்பூர், பரமத்தி ஆகிய பகுதிகளுக்கு இந்த ஏரியை ஒட்டியுள்ள வழியாகத்தான் சென்று வரவேண்டும்.
இப்படி அதிக போக்குவரத்து மிகுந்த சாலையில் இந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் பண்ணையில் இறக்கும் கோழி இறைச்சிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி வந்து இந்த பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் இந்த பகுதியில் காகங்கள், நாய்கள் போன்றவை இறந்து போன கோழிகளை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்று நீர்நிலைகள், கால்நடைகளின் மேய்ச்சல் பகுதிகளில் போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களிலும் செத்த கோழிகள் கிடப்பதால் மேய்ச்சலுக்கு விட முடியவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, அனைத்து கோழிப்பண்ணைகளுக்கும் பண்ணைகளில் இறக்கும் கோழிகளை எரிப்பதற்கு என்று தனியாக ஒரு புதைகுழி அமைப்பு செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருசில கோழிப்பண்ணையாளர்கள் இவ்வாறு கோழி இறைச்சிக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story