மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே இந்திய ஜனநாயகத்தை காக்க முடியும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
வாக்காளர்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே இந்திய ஜனநாயகத்தை காக்க முடியும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
நாமக்கல்,
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் என 4 சட்டசபை தொகுதிகளில் வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பணத்தை முன்னிறுத்தி வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக இது மாற்றம் கண்டு உள்ளது. சட்டப்படி வாக்குக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்கி கொண்டு வாக்காளர்கள் வாக்களிப்பதும் குற்றம் ஆகும். ஆனால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைப்பதை இங்கு பரவலாக பார்க்க முடிகிறது.
மொத்தத்தில் வாக்காளர்களுடைய அறியாமையை அறுவடை செய்வதே தேர்தல் என்பது நடைமுறையாகி போனது. இவ்வாறான போக்கு ஜனநாயகத்திற்கு அடிக்கும் சாவுமணியே ஆகும். தற்போது காலில் விழுந்து காசு கொடுத்து வெற்றி பெறுவோர், பின்னர் கழுத்தை பிடித்து குரல்வளையை நெறித்து பணத்தை பறிப்பாளர்கள் என்பதை உணர்ந்து, வாக்காளர்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே இந்திய ஜனநாயகத்தை காக்க முடியும். இதேபோல் உள்ளாட்சிகளை ஒழுங்குபடுத்திய பிறகே அவற்றிற்கு தேர்தல் நடத்த வேண்டும்.
கள்ளும் ஒரு தடைசெய்யப்பட வேண்டிய போதை பொருள்தான், கள் இயக்கம் கொண்டு இருக்கும் கோரிக்கைகளில் நியாயமே இல்லை என அரவக்குறிச்சி மற்றும் சூலூரில் போட்டியிடும் வேட்பாளரோ அல்லது அவருக்கு வாக்கு கேட்டு வரும் தலைவரோ நிரூபித்து விட்டால் கள் இயக்கம் ரூ.10 கோடி பரிசு கொடுக்கும். மேலும் கள் இயக்கம் கலைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story