சமயபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது


சமயபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 May 2019 4:30 AM IST (Updated: 13 May 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கஞ்சா திருச்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அடுத்துள்ள பள்ளிவிடை பாலம் அருகே சென்றபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நின்றது. அதை பார்த்த போலீசார் அங்கு சென்று, காரில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து காரையும், அந்த 2 வாலிபர்களையும் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். மேலும் காரில் சோதனை செய்த போது, காரின் பின்புறம் 212 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா 2 கிலோ கஞ்சா அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அதை கடத்தி வந்தவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள குண்டூரை சேர்ந்த பாட்சா மகன் கவுசிக்(வயது 24), சீனிவாசன் மகன் துர்க்காராவ்(24) என்பதும் தெரியவந்தது. விஜயவாடா பகுதியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் பண ஆசை காட்டி சில வாலிபர்களிடம் குறிப்பிட்ட நாளில் லட்சக் கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை கொடுத்து, திருச்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்புவதாகவும், திருச்சியை நெருங்கும்போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தவுடன் அவர்கள் வந்து கஞ்சாவை வாங்கி செல்வார்கள் என்றும் தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து அந்த மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த வாலிபர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபோது போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக வேறு நம்பர் பிளேட்டை மாற்றி வந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து மேல் விசாரணை நடத்தினார்.

பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி திருச்சியில் உள்ள போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம், கைதான வாலிபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை சமயபுரம் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும். இது போன்று தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்து திருச்சியில் உள்ள ரவுடிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர். மேலும் ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கஞ்சா கடத்தி செல்வதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் சிக்கினால் தான், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி தெரியவரும் என்றனர்.

Next Story