சூசையப்பர்பட்டினம் ஜல்லிக்கட்டில் 28 பேர் காயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


சூசையப்பர்பட்டினம் ஜல்லிக்கட்டில் 28 பேர் காயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 13 May 2019 4:00 AM IST (Updated: 13 May 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

சூசையப்பர்பட்டினத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 28 பேர் காயம் அடைந்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சூசையப்பர்பட்டினம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தின் மையவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 498 காளைகள் கலந்து கொண்டன. அவற்றை அடக்க 200 வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது வாடிவாசலிலிருந்து சீறிவந்த காளைகளை அடக்க முயன்ற 28 வீரர்கள் காயமடைந்தனர்.

பரிசு பொருட்கள்

இதில் லால்குடியை சேர்ந்த சுகுமார்(வயது 22), கல்லாங்குளம் ஜெகன்நாதன்(45), மலத்தான்குளம் ராஜ்குமார்(25) கல்லாத்தூர் லட்சுமிகாந்தன்(21) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவின் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை காண பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தது ஜல்லிக்கட்டி பார்த்து மகிழ்ந்தனர். ஜல்லிக்கட்டையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story