செஞ்சியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
செஞ்சியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் 5½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி,
செஞ்சி என்.ஆர்.பேட்டை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் செல்வம்(வயது 42). இவர் இல்லோடு கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் இல்லோடு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் அவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, பீரோ கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அதில், இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 5½ பவுன் நகைகளை காணவில்லை.
இதையடுத்து செல்வம் இதுபற்றி செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டதோடு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story