இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை


இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 13 May 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் மாறி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரின் மைய பகுதியில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, ஈரோடு, கோவை, சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல கீரனூர், கந்தர்வகோட்டை, அரிமளம், கறம்பக்குடி, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, மணமேல்குடி, பொன்னமராவதி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல், புதிய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்கள் உள்ளே வரும் பகுதி, திருச்சி, மதுரை பஸ்களை நிறுத்தும் இடம், தஞ்சாவூர் பஸ்கள் நிறுத்தும் இடம் போன்ற பகுதிகளில் நிறுத்தி விட்டு செல்கின்றன. இதனால் தற்போது புதிய பஸ் நிலையம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.

பயணிகள் கடும் அவதி

இதேபோல அரசு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு செல்கின்றன. பின்னர் பணியை முடித்துவிட்டு, தங்களது இருசக்கர வாகனங்களை எடுத்து கொண்டு வீட்டிற்கு செல்கின்றன. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு சில நேரங்களில் போக்குவரத்து போலீசார் கடமைக்கு வந்து பஸ் நிலையத்திற்குள் யாரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்து செல்கின்றன.

ஆனாலும் பெரும்பாலானவர்கள் பஸ் நிலைய வளாகத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் சிலர் தங்களது வாகனங்களை பயணிகள் நடை பாதையில் ஏற்றி வைத்து செல்கின்றன. எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story