வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி கலெக்டர் அன்புசெல்வன் பேட்டி


வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி கலெக்டர் அன்புசெல்வன் பேட்டி
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 13 May 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் அன்பு செல்வன் கூறினார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி நடந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

அங்கு வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெறும். அதனை தொடர்ந்து காலை 8-30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் மொத்தம் 84 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை உதவியாளர், மேற்பார்வையாளர், ஒரு நுண்பார்வையாளர் என 3 பேர் பணியில் இருப்பார்கள். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும் சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரங்கள் அறிவிக்கப்படும்.

அனைத்து சுற்றுகளின் ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு ‘விவிபேட்’ கருவியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதற்காக வாக்கு எண்ணுமிடத்தில் தனியாக ஒரு மேஜை போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 5 வாக்குச்சாவடிகளில் ‘விவிபேட்’ கருவியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அவை அந்த வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்கு எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறதா? என்பது சரி பார்க்கப்படும். இதில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுவரை 70 சதவீத தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ராணுவத்தில் உள்ளவர்களுக்கு எலக்ட்ரானிக் மீடியா மூலம் தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அவர்கள் பதிவிறக்கம் செய்து ஓட்டுப்போட்டு தபாலில் அனுப்பி வைப்பார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் தான் பதிவிறக்கம் செய்து ஓட்டுப்போட்டு அனுப்பி இருக்கிறார்களா? என்பதை உறுதிசெய்ய அவர்கள் ஒவ்வொருவருக்கும் ‘கியூஆர் கோடு’ கொடுத்து உள்ளோம். அந்த ‘கியூஆர் கோடு’ எங்களிடம் உள்ள ‘கியூஆர் கோடு‘டன் ஒத்துப்போகிறதா? என்பதை சரிபார்த்த பிறகே அவர்களின் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் தேர்தல் பார்வையாளர் வந்ததும் பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்த திருவதிகையில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு வருகிற 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இது பற்றி வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்து விட்டோம். அந்த ஊரில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது பற்றி ஊரில் கிராம நிர்வாக அதிகாரி மூலமும் தெரிவித்து விட்டோம், தண்டோரா மூலமும் தெரிவித்து உள்ளோம். அந்த வாக்குச்சாவடியில் 657 வாக்காளர்கள் உள்ளனர்.

அங்கு வருகிற 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். மறுவாக்குப்பதிவு அனைத்தும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும், சி.சி.டி.வி. கேமராவும் அங்கே பொருத்தப்பட்டு உள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. எனவே வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் கூறினார்.

Next Story