மோடியால் சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தரசன் பேச்சு
மோடியால் சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கோவை,
சூலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சூலூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். காமாட்சிபுரத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தின் தலைவிதியை மாற்றக்கூடிய தேர்தல் இது. மத்தியில் ஆளுகிற மோடி, மக்கள் விரோத திட்டங்களை மட்டுமே செயல்படுத்திக் கொண்டு இருந்தார். குறிப்பாக தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கக்கூடிய ஸ்டெர்லைட், மீத்தேன், நீட் போன்ற திட்டங்களை நிறைவேற்றினார். எனவே மோடியால் சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை. அதற்கு பதிலாக நாட்டுக்காக தியாகங்களை செய்த நேருவின் குடும்பத்தை தரக்குறைவாக பேசி மோடி ஓட்டு கேட்கிறார்.
தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசு, பிரதமர் மோடிக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. எனவே, மோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்புவது என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அந்த நிகழ்வு நடக்க இருக்கும் நாள்தான் மே 23-ந்தேதி எனவே வருகிற 19-ந்தேதி பொதுமக்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளித்து பொங்கலூர் பழனிசாமியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலப்பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையத்தில் நேற்று இரவு பொதுக் கூட்டம் நடந்தது. இதிலும் முத்தரசன் கலந்து கொண்டு பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பேசினார்.
Related Tags :
Next Story