மு.க.ஸ்டாலினால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது சூலூர் பிரசாரத்தில் சரத்குமார் பேச்சு


மு.க.ஸ்டாலினால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது சூலூர் பிரசாரத்தில் சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 13 May 2019 3:00 AM IST (Updated: 13 May 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது என்று சூலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் சரத்குமார் கூறினார்.

கருமத்தம்பட்டி,

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சூலூர், நீலாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழிநடத்தினார். தற்போது அவர் இல்லையே என்ற ஏக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் மக்களுக்காக சேவை செய்து வருகிறார் என்றால் அது மிகையாகாது. தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா பயணித்ததுபோல, மக்களை பற்றி சிந்தித்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.

விவசாயிகளுக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அதற்காக ரூ.250 கோடி ஒதுக்கி 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளார். இந்த திட்டம் கனவு திட்டமாக அமைந்து விடும் என்று கூறுகிறார்கள். இப்படிதான் வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறினார்கள். எம்.ஜி.ஆர். அந்த திட்டத்தை நிறைவேற்றினார். அதுபோன்றுதான் அத்திக்கடவு-அவினாசி திட்டமும்.

விவசாயிகளுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. விவசாயிகளுக்கு ஒன்று என்றால் முதலில் கொதித்து எழும் ஆட்சிதான் இது. ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டத்தை கூறினால் நேரம் போதாது. பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். மாணவர் கள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்று விலையில்லா மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார். அதுபோன்றுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பல திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும், ஒரு கோடி ஏழை-எளிய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதற்குள் தேர்தலை சந்திக்க கூடிய நிலை வந்து விட்டது. தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் கொடுக்க இருக்கிறார்.

மக்களை பற்றி சிந்திக்கிறவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும் என்றால் தற்போது நடைபெறும் 4 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. கண்டிப்பாக 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான் தற்போது தேர்தலை உருவாக்கி இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். ஸ்டாலின் சொன்ன கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான். மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. காற்றாலையையும் காசாக்க முடியும் என்று ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது அவர்கள்தான். அராஜக ஆட்சியை நடத்தியவர்களும் அவர்கள்தான். இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கூறுகிறார். 23-ந் தேதி அன்று எங்கள் ஆட்சி வரும் என்று அவர் சொல்கிறார். அவரால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு இல்லை. சிறந்த முறையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் நீங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்த வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் வி.பி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் மாதப்பூர்பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், நகர செயலாளர் கார்த்திகைவேலன், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறேன். 13-ந்தேதி (இன்று) அரவக்குறிச்சியிலும், 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 16, 17-ந் தேதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் கக்கனின் உறவினர்கள் வீடுகளை காலி செய்த விவகாரத்தில், மீண்டும் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிஇருப்பதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிலையத்தில் சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில துணைபொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், கட்சி நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், வேலுமயில், மணிகண்டன் முத்துராஜ், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story