குளித்தலை பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் அவதி


குளித்தலை பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 12 May 2019 10:45 PM GMT (Updated: 12 May 2019 8:17 PM GMT)

குளித்தலை பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள மருதூர் முதல் பெட்டவாய்த்தலை செல்லும் சாலையோரம் பலர் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். அதுபோல் இப்பகுதியில் அடிக்கடி லாரிகளில் வாழைத்தார்கள் ஏற்றுவது வழக்கம். அப்போது தேவையற்ற வாழை மட்டைகளை சாலையோரமே போடப் படுகிறது. அதுபோல் வாழைத்தார்களை ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் பலர் காய்ந்த வாழை மட்டைகள், போன்ற தேவையற்ற பல பொருட்களை சாலையோரம் போட்டுவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதுபோன்று சாலையோரம் போடப்பட்டு காய்ந்து கிடக்கும் பொருட்கள் அவ்வப்போது தீவைத்து எரிக்கப்படுகிறது. அப்படி தீவைத்து எரிக்கப்படும்போது அதில் ஏற்படும் புகை இப்பகுதி முழுவதும் பரவி புகைமண்டலமாக காணப்படுகிறது.

இப்புகையுடன் சில நேரங்களில் தீப்பொறிகளும் காற்றில் கலந்துவருகின்றன. இதனால் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதிலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக புகையால் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் விபத்துகளில் சிக்கும் ஆபத்தான சூழ்நிலையும் ஏற்படுவதாக அவர்கள் கூறிவருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இனிவரும் காலங்களில் சாலையோரம் கிடக்கும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story