ராஜாக்கமங்கலம் அருகே ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் கதி என்ன? 3 பேர் மீட்பு


ராஜாக்கமங்கலம் அருகே ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் கதி என்ன? 3 பேர் மீட்பு
x
தினத்தந்தி 12 May 2019 11:15 PM GMT (Updated: 12 May 2019 8:38 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் கதி என்ன? என்று தெரியவில்லை. மீட்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜாக்கமங்கலம்,

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகன் கிருஷ்ணகுமார் (வயது 19), கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய நண்பர் விக்னேஷ் (19). இவரும் மதுரையில் வசித்து வருகிறார். விக்னேசின் மாமா பிரபு என்பவரது வீடு குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பரமன்விளையில் உள்ளது.

இந்த நிலையில் விக்னேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட நண்பர்கள் கோடை விடுமுறையில் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். அதன்படி விக் னேஷ், கிருஷ்ணகுமார் மற்றும் நண்பர்களான நாராயணகுமார், சிவனாஷ், சுதர்சன் உள்பட மொத்தம் 14 பேர் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்தனர். அங்கு கடல் அழகை ரசித்தனர்.

பின்னர் நேற்று காலை விக்னேஷ் அனைத்து நண்பர்களையும் தன் மாமா வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு காலை உணவை முடித்த நண்பர்கள் கடலில் குளித்து கும்மாளம் அடிக்க முடிவு செய்தனர். அதன்படி 14 பேரும் ராஜாக்கமங்கலம் அருகே ஆயிரங்கால் பொழிமுகம் கடலில் குளிக்க சென்றனர். இவர்களுடன் விக்னேசின் மாமா பிரபுவும் சென்றார். ஆனால் அவர் குளிக்கவில்லை. கரையில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோடு, எச்சரிக்கையுடன் குளிக்குமாறு அறிவுறுத்தி கொண்டே இருந்தார். ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த நண்பர்கள் கடலின் ஆபத்தை உணரவில்லை.

ஏனெனில் குமரி மாவட்டத்தில் தற்போது கடல் சீற்றம் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் ராட்சத அலைகள் எழுந்து மிரட்டுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையை அவர்கள் யாரும் அறியவில்லை. அனைவரும் மகிழ்ச்சியாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென ராட்சத அலை வந்தது. சுமார் 10 அடிக்கும் மேலாக எழுந்த அந்த அலை கிருஷ்ணகுமார், நாராயணகுமார், சிவனாஷ் மற்றும் சுதர்சன் ஆகிய 4 பேரையும் சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இதைத் தொடர்ந்து கரையில் நின்ற பிரபு ஓடி வந்து அலை இழுத்து சென்றவர்களை காப்பாற்ற முயன்றார். நாராயணகுமார், சிவனாஷ் மற்றும் சுதர்சன் ஆகிய 3 பேரையும் எப்படியோ போராடி மீட்டு விட்டார். ஆனால் கிருஷ்ணகுமாரை மட்டும் அவரால் மீட்க முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி விட்டார். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் மீட்கப்பட்ட 3 பேரும் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே இச்சம்பவம் பற்றி ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அங்கு வந்து கடலில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருடன் அப்பகுதி மீனவர்களும் கடலில் இறங்கி தேடினார்கள். இந்த தேடுதல் வேட்டை இரவு வரை நடந்தது. ஆனாலும் ராட்சத அலையில் சிக்கிய கிருஷ்ணகுமாரை மீட்க முடியவில்லை. இதனால் கிருஷ்ணகுமாரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகுமாரை தேடும் பணி இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக நடைபெற உள்ளது. சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர் கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரில் சிவனாஷ் மற்றும் சுதர்சன் ஆகியோர் நலமாக இருக்கின்றனர். ஆனால் நாராயணகுமாரின் நிலைமை சற்று மோசமாக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 

Next Story