தொட்டியம் சிவன் கோவில் அருகே கோசாலை அமைக்க தி.மு.க. நிர்வாகி எதிர்ப்பு இருதரப்பினர் இடையே வாக்குவாதம்


தொட்டியம் சிவன் கோவில் அருகே கோசாலை அமைக்க தி.மு.க. நிர்வாகி எதிர்ப்பு இருதரப்பினர் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 12 May 2019 10:15 PM GMT (Updated: 12 May 2019 8:58 PM GMT)

தொட்டியம் சிவன்கோவில் அருகே கோசாலை அமைக்க தி.மு.க. நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொட்டியம்,

தொட்டியம் நகரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அனலாடீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் திருப்பணிக்குழு மற்றும் நிர்வாகம் சார்பில் கோவில் அருகே நந்தவனம் அமைத்து கோசாலை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதையறிந்த அதே பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வரும் தி.மு.க. பேரூர் செயலாளர் நிர்மலாசந்திரசேகர், அப்பகுதியில் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கோர்ட்டு தள்ளுபடி செய்து, கோவில் அருகில் நந்தவனம் மற்றும் கோசாலை அமைக்க அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கோசாலை அமைக்க பூமிபூஜை நடத்தி, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று தி.மு.க. பேரூர் செயலாளர் நிர்மலாசந்திரசேகர் மற்றும் சிலர் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள், திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். கோவில் நிலத்தில் கோசாலை கட்ட தி.மு.க. நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story