பர்கூர் மலைப்பாதையில் குறுகிய வளைவில் திரும்ப முடியாத கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு தீர்வு காண நடிவடிக்கை எடுக்கப்படுமா?
பர்கூர் மலைப்பாதையில் உள்ள குறுகிய வளைவில் திரும்ப முடியாத கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 33 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பர்கூர் மலைப்பாதையானது அந்தியூர் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநில பகுதிகளுக்கு இரும்பு கம்பிகள், சிமெண்டு, உணவுப்பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை, கோழித்தீவனங்கள், விவசாய விளைபொருட்கள் ஆகியவை அந்தியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. எனவே இந்த மலைப்பாதையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இவ்வளவு போக்குவரத்து நிறைந்த பர்கூர் மலைப்பகுதியில் மிகவும் குறுகலான 3 வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் 14 சக்கரங்களுக்கு மேற்பட்ட சக்கரகங்களை உடைய கனரக வாகனங்கள் செல்லும் போது திரும்ப முடியாமல் அப்படியே பழுதாகி ரோட்டின் குறுக்கே நின்று விடுகின்றன. அவ்வாறு நிற்கும் வாகனங்களால் மற்ற வாகனங்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பர்கூர் மலைப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘14 சக்கரங்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட சக்கரகங்களை உடைய கனரக வாகனங்கள் செல்லும்போது பர்கூர் மலைப்பாதையின் 3 குறுகிய வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்றுவிடுவது தொடர்கதையாகி வருகிறது. இதன்காரணமாக இந்த மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்படும்போது பர்கூர் மலைக்கிராமங்களில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை சிகிச்சை மற்றும் பிரசவத்துக்காக அந்தியூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
எனவே இதற்கு தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், 14 சக்கரத்துக்கு மேற்பட்ட வாகனங்களை பர்கூர் மலைப்பாதையில் இயக்க தடை விதிக்க வேண்டும்,’ எனவும் கோரிக்கை விடுத்தனர்.