மின்மோட்டார் வைத்து உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை


மின்மோட்டார் வைத்து உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 May 2019 10:15 PM GMT (Updated: 12 May 2019 9:14 PM GMT)

மின்மோட்டார் வைத்து உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணை மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகரில் மட்டும் சுமார் 30 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதையடுத்து திண்டுக்கல் நகர், புறநகர் பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால் சிலர் மின்மோட்டார்களை வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனர். அவ்வாறு உறிஞ்சப்படும் தண்ணீரை குடிநீருக்காக மட்டுமில்லாமல் இதர பயன்பாட்டுக்கும் உபயோகிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு சென்று மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர். அப்போது வீடுகளில் மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவது தெரியவந்தால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை 45 மின்மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன் கூறுகையில், கோடைகாலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். மின்மோட்டார்கள் வைத்து தண்ணீரை உறிஞ்சக்கூடாது. அவ்வாறு செய்தால் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார்.


Next Story