மேகமலை அருகே அணையில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் கதி என்ன? பந்தயம் கட்டி நீந்தியபோது விபரீதம்


மேகமலை அருகே அணையில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் கதி என்ன? பந்தயம் கட்டி நீந்தியபோது விபரீதம்
x
தினத்தந்தி 13 May 2019 4:45 AM IST (Updated: 13 May 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

மேகமலை அருகே அணையில் பந்தயம் கட்டி நீந்திய என்ஜினீயரிங் மாணவர் தண்ணீரில் மூழ்கினார். அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை சிறந்த சுற்றுலா தலம் ஆகும். தற்போது இங்கு குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அதன்படி மதுரை எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ரோகித்சஞ்சய் (வயது 21), தனது நண்பர்கள் 3 பேருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் மேகமலைக்கு சுற்றுலா வந்தார்.

மேகமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மலை உச்சியில் உள்ள மகாராஜாமெட்டு அணைக்கு அவர்கள் சென்றனர். அப்போது ரோகித்சஞ்சய், பந்தயம் கட்டி அணையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீந்தி சென்றதாக தெரிகிறது. அணையின் மையப்பகுதிக்கு சென்ற ரோகித்சஞ்சய் திடீரென தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

இதனைக்கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள், ஹைவேவிஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், உத்தமபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையொட்டி நிலையஅலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான தீயணைப்பு வீரர்களும், ஹைவேவிஸ் போலீசாரும் அங்கு விரைந்து வந்து மஹாராஜாமெட்டு அணையில் மூழ்கிய ரோகித்சஞ்சயை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை நேரமானதாலும், மழை பெய்ததாலும் அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

எனவே மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை ரோஹித்சஞ்சயை தேடும் பணி நடைபெறும் என ஹைவேவிஸ் போலீசாரும், தீயணைப்பு படையினரும் தெரிவித்தனர்.

Next Story