இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜனதா ஆட்சி அமையும் சூழல் உருவாகும் எடியூரப்பா நம்பிக்கை


இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜனதா ஆட்சி அமையும் சூழல் உருவாகும் எடியூரப்பா நம்பிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 4:00 AM IST (Updated: 13 May 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் சூழல் உருவாகும் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் சூழல் உருவாகும் என்று எடியூரப்பா கூறினார்.

பா.ஜனதாவில் இணைந்த காங்கிரசார்

தார்வார் மாவட்டம் குந்துகோல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சி.எஸ்.சிவள்ளி. காங்கிரசை சேர்ந்த இவர் கூட்டணி அரசில் மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து குந்துகோல் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் சிக்கன்னகவுடா போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து நேற்று குந்துகோல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிஹாலா பகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரசைச் சேர்ந்த கோபிஹாலா தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் ஈசுவரப்பா, தாவனூரு கிராம பஞ்சாயத்து பிரமுகர்கள் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர். பின்னர் எடியூரப்பா பேசியதாவது:-

அபார வெற்றிபெறும்

கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த மந்திரியான டி.கே.சிவக்குமார், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர உள்ளதாக கூறிவருகிறார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்தான் பா.ஜனதாவில் சேர உள்ளனர். அதுபோல் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக மந்திரி ஜமீர் அகமதுகான் கூறியுள்ளார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிருப்தியில் இல்லை. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், பதவி ஆசையை காங்கிரஸ் தலைவர்கள் காட்டினாலும், அவர்கள் காங்கிரசில் சேர மாட்டார்கள். குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

அந்த தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருந்து தங்களது பலத்தை கூட்டணி கட்சிகளுக்கு காட்டுவார்கள். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மோதல் வெடிக்கும்

கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சோ்ந்தவர்களிடம் தான் மோதல் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும், அந்த மோதல் வெடிக்கும். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியாக இருந்து என்ன செய்ய வேண்டுமோ, அதனை பா.ஜனதா செய்யும்.

குந்துகோல் தொகுதியில் 2 நாட்களாக பிரசாரம் செய்துள்ளேன். நாளை (அதாவது இன்று) முதல் சிஞ்சோலி தொகுதியில் பிரசாரம் செய்வேன். வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் மீண்டும் குந்துகோல் தொகுதியில் பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story