திருப்பூர் மாநகரில் பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் தவிக்கும் மக்கள்


திருப்பூர் மாநகரில் பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் தவிக்கும் மக்கள்
x
தினத்தந்தி 13 May 2019 4:00 AM IST (Updated: 13 May 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் மக்கள் தவித்து வருகிறார்கள்.

திருப்பூர்,

டாலர் சிட்டி என்று பெயர் பெற்ற திருப்பூர் மாநகர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்தும், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பூருக்கு வந்து இங்குள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு செல்கிறார்கள். பெரும்பாலும் பஸ் போக்குவரத்தை நம்பியே இவர்கள் இருக்கிறார்கள். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பகல் நேரத்தில் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் காத்திருக்க முடியவில்லை.

மாநகரில் பல இடங்களில் ரோடு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளால் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு அந்த பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்கவில்லை. தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். நிழற்குடை இல்லாமல் வெயிலிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் முதியவர்கள், சிறியவர்கள் வெயில் கொடுமைக்கு ஆளாகி தவித்து வருகிறார்கள்.

திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்புறம் நிழற்குடை எதுவும் இல்லை. டவுன் பஸ்களில் ஏறி செல்வதற்காக பஸ் நிலையம் முன்பு வெயிலில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் வேளையில் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?.


Next Story