நடந்து முடிந்த தேர்தலில் 40 சதவீத அரசு ஊழியர்கள் வாக்களிக்கவில்லை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தகவல்
நடந்து முடிந்த தேர்தலில் 40 சதவீத அரசு ஊழியர்கள் வாக்களிக்கவில்லை என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– தற்போது நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் சுமார் 60சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
மீதமுள்ள 40 சதவீத பேர் வாக்களிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தலில் 100 சதவீத பேர் வாக்களிக்க வேண்டி தேர்தல் ஆணையம் முயற்சி எடுத்து அதற்காக விளம்பரங்கள் செய்து வரும் வேளையில் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அந்த வாக்கு சீட்டை பெறுவதற்குரிய படிவத்தை தேர்தல் அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை.
இதையடுத்து ஒரு சில ஆசிரியர்கள் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டு தங்கள் வாக்கு சீட்டு படிவத்தை பெற்று ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டிய நிலை உள்ளது. நாடு முழுவதும் தேர்தல் முடிய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் வாக்களிக்காத தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வாக்கு சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேட்டியின் போது ஜாக்டோ–ஜியோ அமைப்பின் நிதி காப்பாளர் மோசஸ், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராகவன், வைரம் மற்றும் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், சிக்கன நாணய கூட்டுறவு சங்க தலைவர் பொன்.பால்துரை, வட்டார செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.